பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்தை முக்கியமான நிர்வாகிகள் புறக்கணித்த நிலையில், ‘பா.ம.க. ராமதாஸின் கட்டுப்பாட்டில் இல்லை. விரைவில் அன்புமணியின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள.
பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களை தொடர்ந்து, 2வது நாளாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை மகளிரணி, மாணவரணி மற்றும் இளைஞரணியும் புறக்கணித்து உள்ளனர். ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணிப்பதால் ராமதாஸை ஓரங்கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பாமகவை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அன்புமணி புதிய வியூகத்தை வகுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாமகவில் நிறுவன தலைவரான தந்தை ராமதாசுக்கும், பாமக தலைவரான மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து, திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை ராமதாஸ் நடத்தினார். இதில் 182 நிர்வாகிகளில் 159 பேர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
அன்புமணியும் பங்கேற்காத நிலையில் பாமகவில் மீண்டும் உள்கட்சி குழப்பம் அதிகரித்தது. பாமகவுக்குள் எந்த கோஷ்டி பிரச்னையும் இல்லை என நிறுவனர் ராமதாஸ் கூறினாலும், 10 சதவீதம் நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதால், அன்புமணி கை பாமகவில் ஓங்கி உள்ளதை காட்டுகிறது. இந்நிலையில், நேற்று ராமதாஸ் தலைமையில் மகளிர் அணி, மாணவர், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கான அழைப்பு தலைமை நிலைய செயலாளர் மூலம் அனைத்து மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் விடுக்கப்பட்டும் காலை 10 மணியை கடந்தும் நிர்வாகிகளில் ஒருசிலர் மட்டுமே தோட்டத்துக்கு வந்தனர். மாநில மகளிர் அணி செயலாளர் தேவி குருசெல்வி, சேலம் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம், சேலம் பாமக மாநில மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி வரதராஜ் ஆகியோர் தைலாபுரம் வந்தனர்.
மற்ற எந்த மாவட்டத்திலிருந்தும் நிர்வாகிகள் யாரும் வரவில்லை. அதேபோல் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமைக் கழக செயலாளர் அன்பழகன் ஆகியோரும் பங்கேற்றனர். 2வது நாளாக அன்புமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தனர். பாமகவில் மொத்தம் 91 மாவட்டங்கள் உள்ளன. இதில் மகளிர் அணியை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 தலைமை கழக நிர்வாகிகள் உள்ளனர். மொத்தம் 273 நிர்வாகிகள் இருந்தும் 5 பேர் மட்டுமே நேற்றைய கூட்டத்துக்கு வந்திருந்தனர். மற்ற அனைவரும் ராமதாசின் அழைப்பை புறக்கணித்தனர். இதனால் அப்செட் ஆன ராமதாஸ், 30 நிமிடம் மட்டுமே மகளிரணியினருடன் ஆலோசித்தார். இதுதவிர தலைமைக்கழக நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் பெரும்பாலானோர் கலந்து கொள்ளாததால் வெறிச்சோடியது.
இதேபோல் இளைஞரணி கூட்டத்துக்கும் நிர்வாகிகள் அதரவு மிக குறைவாகவே இருந்தது. கடலூரிலிருந்து 5 பேர் மட்டுமே வந்த நிலையில் மாநில இளைஞரணி தலைவரான பரசுராமன் முகுந்தன் அவர்களுடன் சிறிதுநேரம் தனியாக ஆலோசனை நடத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதேவேளையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர் அணியினர் தலைவர் கோபி தலைமையில் வந்தனர். அவர்களிடம் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் நாளை (19ம்தேதி) காலை 10 மணிக்கு ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மற்றும் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி அறிவித்துள்ளார். இதனிடையே வன்னியர் சங்க நிர்வாகிகளிடமும் அன்புமணி தரப்பில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி மாவட்ட செயலாளர், தலைவர்களை தொடர்ந்து மகளிர் அணியையும், இளைஞரணி அணியையும் அன்புமணி முழுமையாக தன்வசம் கொண்டு வந்துள்ளதாகவும், வன்னியர் சங்க நிர்வாகிகளையும் கட்டுப்படுத்தி விட்டால் முழுமையாக பாமகவை தனது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்துவிடுவார் என்று பாமகவினர் கூறுகின்றனர்.
அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி மாற்று நடவடிக்கைகளை எடுத்தால் அனைவரின் ஆதரவோடு ராமதாஸை கட்சியில் இருந்து ஓரங்கட்டி விட்டு, கட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், முழு அதிகாரத்தையும் கைப்பற்றவும் அன்புமணி திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர். மொத்தம் 273 மகளிரணி நிர்வாகிகள் இருந்தும் 5 பேர் மட்டுமே நேற்றைய கூட்டத்துக்கு வந்திருந்தனர்.