தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்திருந்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ஒப்புதல் அளிக்க ‘கெடு’வும் விதித்திருக்கிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது; கண்டனங்கள் தெரிவித்தது. மேலும், மாநில சட்டசபை நிறைவேற்றும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால், மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது, ஜனாதிபதிக்கு அனுப்ப அதிகாரம் இருக்கிறதா? மாநில அரசின் அதிகாரத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட மசோதாக்களை மட்டுமே அனுப்ப முடியுமா? அனைத்து மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க இயலுமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் இன்று ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்…
- – ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை.
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானதாக இருக்கிறது. –
- தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்து ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுய்பி வைத்தது சட்டவிரோதம்.
- தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன
*தமிழ்நாடு அரசு 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் தர வேண்டும்.
- ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் படி சுயேட்சையாக செயல்பட அதிகாரம் உள்ளதா? அல்லது மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். –
- மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். தமிழக அரசின் மசோதாக்கள் சிலவற்றுக்கு 3 வாரத்திலும் மற்றவைகளுக்கு ஒரு மாதத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும்.
- ஆளுநர் ரவிக்கு காலக்கெடு நிர்ணயிக்கவே முடியாது; நிர்பந்திக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதம் நிரகாரிப்பு.