திமுகவில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு கட்சிப் பணிகளில் வாய்ப்பளிக்கும் வகையில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. குறிப்பாக, முதல்வராக இருந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தான் போட்டியிட்ட கொளத்தூரில் தோல்வியைத் தழுவியது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தோல்விக்கான காரணம் குறித்து ஆராய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அக்குழு சமீபத்தில் விரிவான அறிக்கையை தலைமையிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

உத்தேச பட்டியல்….

இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள் பேசியபோது, ‘‘கள ஆய்வுக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின்படி கட்சிக்குள் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது.

தற்போது திமுகவில் 78 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். ஒருசிலர் தங்கள் கட்டுப்பாட்டில் 4 முதல் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளை வைத்துள்ளனர். இதனால் கட்சிக்குள் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே 2 அல்லது 3 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 110-க்கும் மேல் உயர்த்த தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

அதேபோல், 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 3 முறைக்கு மேல் மாவட்டச் செயலாளராக இருந்த எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 13 பேருக்கும் மேற்பட்டவர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. புதிதாக 40-க்கும் மேற்பட்டோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. அதில் இளைஞரணி, மகளிரணிக்கு முக்கியத் துவம் வழங்கப்படவுள்ளது.

திருவண்ணாமலையில் எ.வ.வேலுவின் மகன் கம்பன், தூத்துக்குடியில் தி.மு.க.வின் இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் என இளைஞரணியிருக்கு மா.செ.க்கள் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal