‘‘தென் மாவட்டங்களை கட்டுப்படுத்தும் நபராக எப்படி திமுகவில் மு.க.அழகிரி இருந்தாரோ, அதே மாதிரி இனி தென் மாவட்ட திமுகவின் முகமாக கனிமொழி மாறப்போகிறார்’’ என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2009ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமான் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குக் காரணமான திமுக தேர்தல் பணிக்குழுத் தலைவரான அழகிரிக்கு திமுக வட்டாரத்தில் செல்வாக்கு கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னைக்கு அழகிரி தலைமையில் வந்த வேட்பாளர் லதா அதியமான் வரவேற்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, ‘‘காத்திரு அழகிரி, கழகத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு உனக்கு தரப்படும். பேராசிரியருடன் (பொதுச் செயலாளர் அன்பழகன்) கலந்து பேசி அறிவிப்பு வரும்’’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி நியமிக்கப்படுதாக அறிவித்தார். கலைஞர் மறைவுக்கு முன்பிருந்தே மு.க.அழகிரி அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.

இந்தநிலையில்தான் டெல்லியில் கர்ஜித்துக்கொண்டிருந்த கனிமொழி, தென் மாவட்டங்களின் தி.மு.க. முகமாக மாறப்போவதாக தகவல்கள் வெளியாகிறது. இது பற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘மத்தியில் ஆளும் பா.ஜ.க.வே ‘சாதி’ ரீதியாக சில கணக்குகளைப் போட்டு காய் நகர்த்தி வருகிறது. அ.தி.மு.க.வும் கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக வைத்திருக்கும் நிலையில் தென் மாவட்டங்களின் குறி வைத்து சில காய்களை நகர்த்தி வருகிறது. முக்குலத்தோர் மற்றும் நாடார் சமுதாய வாக்குகளை பெறும் வகையில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம்கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்தான் கலைஞர் கருணாநிதியின் மகளும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியை ஒரு (தூத்துக்குடி)மாவட்டத்திற்குள்ளேயே முடக்க நினைத்தால், அது தி-.மு.க.விற்குத்தான் இழப்பு! இந்த நிலையில்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களின் தி.மு.க.வின் முகமாக கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கனிமொழியின் ஆதரவாளர்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal