நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு இந்தி சின்னத்திரை நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸை காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையே நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த், மனைவி யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி, மனு தாக்கல் செய்தார்.

இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு தனது கணவர் பிரசாந்த், ஹன்சிகா, அவர் தாயார் மோனா ஆகியோர் மீது, தன்னை சித்ரவதை செய்ததாக மும்பை அம்பாலி போலீஸில் முஸ்கான், குடும்ப வன்முறை புகார் கொடுத்தார். மூவரும் தன்னிடமிருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுப்பொருட்களைக் கேட்பதாகவும் கணவருடன் வாழ விருப்பம் தெரிவித்தும் கூட, அதற்கு ஹன்சிகாவும் அவர் தாயாரும் தடையாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து ஹன்சிகா உள்ளிட்டோர் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் முஸ்கானின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் உள்நோக்கம் கொண்டவை என்றும் தங்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை ஹன்சிகா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சாரங் கோட்வால் மற்றும் நீதிபதி எஸ்.எம்., மோடக்ஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதற்கு பதிலளிக்குமாறு போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இம்மனு மீதான விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்குத் தள்ளி வைத்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal