ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனையில் ‘கட்டண’ முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருகிறது.

இந்தியா முழுவதும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர். போட்டிகளை காணும் ஆர்வத்தில் வரும் ரசிகர்களை ஏமாற்றி, கூடுதலாக கட்டணம் வசூலித்து முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கேளிக்கை வரி, அடிப்படைக் கட்டணத்தில் 25 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த போது, 2343 ரூபாய் அடிப்படை கட்டணம் கொண்ட ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுக்கு கேளிக்கை வரி 781 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது நியாயமாக வசூலிக்கப்பட வேண்டிய வரியைக் காட்டிலும் 196 ரூபாய் அதிகம் என்கின்றனர் ரசிகர்கள்.

அதேபோல, கேளிக்கை வரிக்கும் சேர்த்து ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வரி மீது வரி விதிப்பு செய்து கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளனர். இதனால், 2,343 ரூபாய் அடிப்படை கட்டணம் கொண்ட ஐ.பி.எல்., டிக்கெட், ரசிகர் கடைசியில் வாங்கும் போது 4,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட்டில் உரிய கட்டணம், வரி தொடர்பான பிரேக் அப் விவரங்களும் இல்லை.

கிரிக்கெட் போட்டியை காண ஆர்வத்துடன் வரும் ரசிகர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் இத்தகைய முறைகேடான கட்டண வசூல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நியாயமாக, டிக்கெட் கட்டணம், அதன் மீதான கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுடன் மொத்த கட்டணத்துக்கு சரியான பிரேக் அப் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal