வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடுவார் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இதனால், 2026ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்துவிடும் என உற்சாகத்தில் இருக்கிறார்கள் உடன் பிறப்புக்கள்!

நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்.2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மையமாக கொண்டு கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை நியமித்துள்ளார். விஜய்க்கு தேர்தல் ஆலோசனைகளை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வழங்கி வருகிறார்.

சில தினங்களுக்கு முன் சென்னையில் நடிகர் விஜயை பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். த.வெ.க., கட்சி 2ம் ஆண்டு விழாவிலும் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார்.

இந்நிலையில், தனியார் செய்தி சேனலுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். அதற்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன்.

பீஹார் தேர்தலில் எனக்கு உதவி செய்வதாக விஜய் உறுதி அளித்துள்ளார். அங்கு விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே அவர் முடிவு. விஜய்யுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., விரும்புகிறது. ஆனால் அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க த.வெ.க., விரும்பவில்லை.

விஜய் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் வெற்றி பெறுவார். விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பார்’’ இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

2026ல் ‘மக்கள் நலக் கூட்டணி’ மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய மறைமுகமாக எப்படி உதவியதோ, அதே போல், 2026ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய மறைமுகமாக ஆதவ் அர்ஜுனா பிரசாந்த் கிஷோரை வைத்து உதவுவதாக கூறுகிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal