தமிழகத்தில் பாலியல் தொல்லைகளால் பெண்கள் மட்டும் அல்ல, மாணவர்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள். இந்த அவலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதுதான் வேதனை அளிக்கிறது.
மாணவனுடன் ஆசிரியை உறவு… மாணவிகளுடன் ஆசிரியர்கள் உறவு… என்ற செய்தி தினம்தோறும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில்தான், விஜய் டிவி, சன் டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை நேஹா கவுடா தன்னுடைய ஒன்பதாவது வயதில் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து பேட்டி ஒன்றில் கண்கலங்க பேசியிருக்கிறார்.

இது பலரையும் பதற வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய ஒன்பதாவது வயதில் தனக்கு நடந்த அவலம் குறித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் சீரியலில் நடித்த நடிகை நேஹா கவுடா வெளிப்படையாக பேசி இருக்கிறார். நேஹா கவுடா சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு சீரியல் மூலமாகத்தான் தமிழ் சீரியலில் அறிமுகமானார். அறிமுகம் ஆன இரண்டு சீரியலுமே நேஹாவிற்கு நல்ல வரவேற்பும் பிரபலமும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கன்னடா மொழியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தன் கவுடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு ஆறு வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு நேஹாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் நேஹா தற்போது எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல கஷ்டமான காலங்கள் பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், ‘‘நான் என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இது பற்றி இதுவரைக்கும் நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. நான் நான்காவது படிக்கும்போது அந்த சம்பவம் நடந்தது. ஒரு நாள் என்னுடைய அம்மா வீட்டில் இல்லை என்னை தூங்க வைத்துவிட்டு வெளியே போயிருந்தாங்க.
பாட்டி மட்டும்தான் வீட்டில் இருந்தாங்க. நான் கண்விழித்து பார்த்தபோது அம்மா இல்லை என்றதும் அவர்களை தேடி வெளியே போயிட்டேன். பக்கத்து தெருவில் ஒருத்தன் உங்க அப்பா எனக்கு தெரியும் என்று என்னிடம் சொன்னான். அதோடு வா உனக்கு வாட்ச் வாங்கி தரேன் என்றும் சொன்னான். நான் முதலில் நம்பவில்லை எங்க அப்பா பெயரை சொல்லுங்கள் என்று கேட்டேன் அதற்கு அவன் தடுமாறினான். அப்போ எனக்கு விபரம் தெரியாததால் நான் ராமகிருஷ்ணாவை தெரியுமா என்று அவனிடம் கேட்க, அதற்கு அவன் ஆமாம் அவர நல்லாவே தெரியும் என்று சொன்னதும் நானும் எங்க அப்பாவை நல்லா தெரியும் என்று நினைத்துக் கொண்டு அவன் பின்னாடி போயிட்டேன்.
எங்கெல்லாமோ கூட்டிட்டு போனான் பிறகு ஒரு வாட்ச் கடைக்கு போய் அங்கு கதவை சாத்தினான். ரொம்ப மோசமா நடந்துக்க ஆரம்பிச்சான். அந்த நேரத்தில் எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியாம பயங்கரமா அழ ஆரம்பிச்சுட்டேன். கத்தியை காட்டி அழாதன்னு சொன்னான். ரொம்ப அடிச்சான். அப்புறம் எப்படியோ அவன்கிட்ட இருந்து தப்பிச்சு நான் வெளியே வந்தேன். எப்படி எங்க வீட்டுக்கு போகணும்னு கூட எனக்கு அந்த நேரத்தில் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நல்லவேளையாக என்னை வீட்டில் எல்லோரும் தேடத் தொடங்கி விட்டார்கள். என்னுடைய உறவினர் என்னை பார்த்து விட்டார். அவர் என்னை வீட்டிற்கு கூட்டிட்டு போனார்.
அங்கு என்னுடைய அப்பாவிடம் என்னை அந்த நபர் அடித்ததை மட்டும் சொன்னேனே தவிர எனக்கு நடந்த அவலம் பற்றி சொல்லவில்லை. அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து ஸ்கூலில் டீச்சர் பேட் டச் குட் டச் சொல்லிக் கொடுத்தாங்க. அப்போதான் எனக்கு நடந்த கொடுமை எனக்கு தெரிய வந்தது. அப்போ நான் அழுதுட்டேன்.
பிறகு என்னுடைய டீச்சர் என்னை ஆறுதல்படுத்தி என்கிட்ட பேசுனாங்க. அதற்குப் பிறகு வீட்டில் அது பற்றி சொன்னாங்க. அதை எங்க அப்பா அழகாக கையாண்டு எனக்கு தைரியம் சொன்னார். அந்த நாட்களை இப்போ நினைத்தாலும் கசப்பா இருக்கு. இதுபோல எத்தனையோ சிறுமிகளுக்கு மோசமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. பல நேரங்களில் அந்த குழந்தைகளுக்கு தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தங்களுக்கு நடக்கும் அநியாயங்கள் பற்றி வீட்டில் சொல்வதற்கு சில குழந்தைகள் பயப்படுகிறார்கள். சில குழந்தைகள் தங்களுக்கு நடந்தது அநீதி என்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.
அதுபோல சில குழந்தைகள் தைரியமாக வீட்டில் சொன்னால் கூட சில பெற்றோர்கள் அதை வெளியே சொல்வதற்கு பயப்படுகிறார்கள். அதை அப்படியே மூடி மறைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனாலேயே இது போன்ற கொடுமை செய்பவர்கள் எந்த பயமும் இல்லாமல் அடுத்தவர்களுக்கும் தொல்லைகள் கொடுக்க தொடங்கி விடுகிறார்கள். இது போன்ற குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்’’ என்று அந்த பேட்டியில் நேஹா உருக்கமாக பேசியிருக்கிறார்.