நடுநிலையான செயல்படவேண்டிய தேர்தல் ஆணையத்தை வைத்து, தங்களுக்கு எதிரான அல்லது தங்கள் வழிக்கு மாநில கட்சிகளை வரவைக்கிறது ‘மேலிடம்’ என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தநிலையில், நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நடந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

‘‘ அடுத்த தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பாக நள்ளிரவில் முடிவு எடுத்தது அநாகரிகமானது’’ என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

அடுத்த தலைமை தேர்தல் கமிஷனரை நியமனம் செய்வதற்கான கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பிறகு, தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஸ்வர் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியானது.

இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘நேற்றைய கூட்டத்தில் அடுத்த தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் செய்யப்பட்டதற்கான கூட்டத்திற்கான எதிர்ப்பு கருத்தை பதிவு செய்திருந்தேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலம், நமது தேர்தல் செயல்முறையின் நேர்மை குறித்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவலையை அதிகப்படுத்தி உள்ளது

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அம்பேத்கர் மற்றும் நமது நாட்டை தோற்றுவித்த தலைவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு அரசை பொறுப்பு ஏற்க வைப்பது நமது கடமையாகும்.தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பான குழுவின் அமைப்பு மற்றும் செயல்முறைக்கு எதிரான வழக்கு இன்னும் 48 மணி நேரத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில், நள்ளிரவில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் புதிய தலைமை தேர்தல் கமிஷனர் நியமனத்திற்காக முடிவு எடுத்தது அநாகரிகமானது’’ இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.

தவிர, குழுவிடம் அளித்த எதிர்ப்புக் கருத்தையும் ராகுல் வெளியிட்டு உள்ளார். அதில், ‘‘கடந்த 1949 ம் ஆண்டு சுதந்திரமான தேர்தல் கமிஷன் அமைப்பது தொடர்பான கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், தேர்தல் கமிஷன் விவகாரம் மற்றும் இந்திய ஜனநாயகத்தில் தலையீடு குறித்து எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

நிர்வாக தலையீடு இல்லாத சுதந்திரமான தேர்தல் கமிஷனுக்கு அடிப்படை விஷயம் என்பது தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திற்கான நடவடிக்கைகள் ஆகும். கடந்த 2023 மார்ச் 2 ல், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. அதில், அவர்களை தேர்வு செய்ய பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெறும் குழு அமைக்க வேண்டும் எனக்கூறியிருந்தது.

தேர்தல் நடவடிக்கை மீதான நம்பகத்தன்மை குறித்து கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவலையை சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிரதிபலித்தது. இந்திய தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அதன் அமைப்புகள் மீது வாக்காளர்களின் நம்பிக்கை குறைந்து வருவதை சமீபத்திய கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டின.

சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து 2023 ஆக., மாதம், மத்திய அரசு, சுப்ரீம் கோரட்டின் உத்தரவை மாற்றி அவசர சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்தில், தேர்தல் கமிஷனர்களை நியமிப்பதற்கான குழுவில் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் நியமிக்கும் மத்திய அமைச்சர் ஆகியோர் இடம்பெறுவார்கள் எனக்கூறப்பட்டது. இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறிய செயல் ஆகும்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை (பிப்.,19) விசாரணைக்கு வர உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட் விசாரணை முடியும் வரை, அடுத்த தலைமை தேர்தல் கமிஷனரை நியமிப்பதற்கான கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்பது காங்கிரசின் கருத்து.

இக்குழுவின் அமைப்பு மற்றும் செயல்முறை குறித்து சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரிக்க உள்ள நிலையில், அடுத்த தலைமை தேர்தல் கமிஷனரை தேர்வு செய்யும் நடவடிக்கையை தொடர்வது என்பது அமைப்புகளுக்கும், நமது நாட்டை உருவாக்கிய தலைவர்களுக்கும் அவமரியாதையாகவும், மரியாதையற்றதாகவும் இருக்கும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal