சமீபத்தில்தான் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு மேடையில் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் நண்பர்களுக்காக ஆட்சியர் எழுந்து நின்றது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், திமுகவில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பேரனுக்கு பேனர் வைக்கும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பதால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த எழிலரசன் தற்போது சேலம் மத்திய மாவட்ட ஒன்றிய பிரதிநிதியாக செயல்பட்டு வந்தார் . மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சேலம் மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

இந்த நிலையில் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்திருக்கிறார். குறிப்பாக திமுக மீது அவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்டக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய ஒன்றிய பிரதிநிதியாக செயல்பட்டு வந்த சேலம் விறி.எழிலரசன் ஆகிய நான் 04.02.2025 இன்று முதல் கீழ்காணும் காரணங்களால் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிகளில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை, கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை, இதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாள்வரை ஒத்துழைப்பு நல்கிய கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

01.09.2024 நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பல்வேறு காரணங்களால் எங்களை கட்சியில் இருந்து நீக்குங்கள் என சேலம் ராஜேந்திரன் அவர்களிடம் விருப்பம் தெரிவித்திருந்தோம். தலித் மக்களுக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை இல்லையென்றால் திமுக கண்டுக்கொள்ளாது. சேலத்தில் ஒரு சமூகம் சார்ந்த கட்சியாக திமுக மாறிவிட்டது. சமூகநீதி என்பது கட்சியின் கொள்கையாக மட்டுமே உள்ளது. செயலில் இல்லை’’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ 2015 ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்த நிலையில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறேன். ஆனால் கட்சியில் பல்வேறு உக்கட்சி பிரச்சினைகள் நிலவுகிறது. இது தொடர்பாக நிர்வாகிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கட்சியை விட்டு என்னை நீக்குங்கள் என சொன்னாலும் பதிலும் கொடுக்கவில்லை. என்னை நீக்கவும் இல்லை.

கட்சியில் துரைமுருகன் மூத்த தலைவர்கள் இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் என குறுகிய காலத்தில் உயர்ந்த பொறுப்புக்கு வந்து விட்டார். ஆனால் கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதையே இல்லை. தற்போது இன்பநிதிக்கு வெளிப்படையாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வருங்காலத்தில் அவருக்கும் பணியாற்ற வேண்டி இருக்கும் என நினைத்த போது வேதனை ஏற்பட்டது. எனவே கட்சியில் இருந்து விலகுகிறேன். மேலும் பலர் அடுத்தடுத்து விலகுவார்கள்’’என கூறி இருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal