‘இன்னும் ஒரு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் நியமனத்தை முடித்திருக்க வேண்டும்’ என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிரடியான உத்தரவைப் பிரப்பித்திருக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு படத்தில் நடித்த பின், முழுமையாக அரசியல் பணியில் ஈடுபடுவேன் என்று அறிவித்தார். தற்போது தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் விஜய், அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
மே மாதத்திற்குள் ஜனநாயகன் படத்தில் நடித்து முடிக்க விஜய் திட்டமிட்டு வருகிறார். அதன்பின் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் என்பதால், அடுத்த 1 ஆண்டில் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார். அதற்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை பலப்படுத்த விஜய் திட்டமிட்டு வருகிறார். அதற்கேற்ப ஏற்கனவே தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை 5 கட்ட மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விஜய் முகம் பொறித்த வெள்ளி நாணயம் வழங்கி தவெக தலைவர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். ஆண்களுக்கு நிகராக மகளிருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெகவின் அடுத்தக் கட்ட நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அடுத்த ஒரு மாதத்தில் நகரம், ஒன்றியம், வட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமிக்க தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவெகவில் மொத்தமாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாகிகள் நியமனத்தை மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு மாதத்திற்குள் மாவட்டச் செயலாளர்கள் தனது மாவட்டங்களுக்கான நகர, ஒன்றியம் மற்றும் வட்டங்களுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்து அந்த பட்டியலை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் நிர்வாகிகள் ஏற்கனவே மக்கள் இயக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும் மறைமுக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணம் செய்து நிர்வாகிகளை சந்திப்பதோடு, மக்களையும் சந்திக்க இருக்கிறாராம் விஜய்.