‘வயல்வெளியிலும், வாழைத் தோட்டத்திலும் சுற்றித் திரிந்து, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்றிருந்த என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தீர்கள்…’
இந்த வாசகத்தை யாராலும் மறந்து விட முடியாது. 1991ல் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்த கு.ப.கிருஷ்ணன் சட்டமன்றத்தில் உதிர்த்த வார்த்தைகள்தான் இது… முதல்வர் ஜெயலலிதாவையே வியக்க வைத்தது இந்த வரிகள்…

ஆம், கடந்த 1991 -முதல் 1996 வரை அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கு.ப.கிருஷ்ணன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக இவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும் என உறுதியாக எல்லோரும் நம்பியிருந்த சூழலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கட்சித் தலைமைக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் கு.ப.கிருஷ்ணன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் கு.ப.கிருஷ்ணன். இந்த நிலையில்தான் இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக திருச்சியில் காட்டுத் தீ போல செய்திகள் பரவி வருகிறது.
இது தொடர்பாக கு.ப.கிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர்கள் சிலரிடம் நாம் பேசியபோது,
‘‘சார், தற்போதைய நிலையில் அ.தி.மு.க ஆட்சிக்கு வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது, அடித்தட்டில் இருக்கும் முத்தரையர் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். திருச்சியில் முத்தரையர் சிலை அமைய மூலகாரணமாக இருந்தவரும் இவர்தான்.
தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு மாபெரும் இயக்களிலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘டம்மி’ துறையை கொடுக்கிறார்கள். இதனால், அடித்தட்டில் இருக்கும் அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த உதவியையும் அவர்களால் செய்ய முடியவில்லை.
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு முத்தரையர்களுக்கான முக்கியத்தும் குறைந்துவிட்டது. சமீபத்தில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி முத்தரையருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர். எனவே, விரைவில் எங்கள் அண்ணன் கு-.ப.கிருஷ்ணனோடு நாங்கள் த.வெ.க.வில் இணைய முடிவு செய்திருக்கிறோம்’’ என்றனர்.
இந்த விஷயம் கு.ப.கி.க்கு தெரியுமா? என்றோம். ‘‘இல்லை… இது எங்களது விருப்பம்… எங்களது விருப்பத்தை சொல்லி விரைவில் த.வெ.க.விற்கு பலம் சேர்ப்போம்’’ என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்..!