எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நேரடிக் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. ஐ.டி. விங் அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் பாஜக ‘ஐடி விங்’கைத்தான் பவர்ஃபுல் என்பார்கள். ஆனால், ‘யார் அந்த சார்?’ விவகாரத்தை சட்டமன்றம் வரைக்கும் பேசுபொருளாக்கியதன் மூலம் அதிமுக ‘ஐடி விங்’ இப்போது திடீர் வேகமெடுத்திருக்கிறது. இந்த வேகம்தான் தி.மு.க.வை திக்கு முக்காட வைத்திருக்கிறது.
2014-ல் தான் அதிமுக ‘ஐடி விங்’கே உருவாக்கப்பட்டது. ஆனபோதும் மற்ற கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத வகையில் அதிமுக ‘ஐடி விங்’ ஸ்லீப் மோடிலேயே இருப்பதாக அதிமுக-வினரே குறைபட்டுக் கொண்டார்கள். அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் மாநிலச் செயலாளராக ராஜ்சத்தியன் பொறுப்பேற்ற பிறகு, ஆளும் தி.மு.க.விற்கு இணையாக அ.தி.மு.க. ஐ.டி.விங் செயல்பட்டது.
‘ஐடி விங்’ ஆக்டிவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அண்மையில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழுவிலும், “தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்த வேண்டும். அதில், திறன் மிக்க இளைஞர்களை பொறுப்பில் நியமிக்க வேண்டும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், அதிமுக தொடர்பான பதிவுகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்நிலையில் தான், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என அதிமுக ‘ஐடி விங்’ எடுத்துக் கொடுத்த ஒற்றை வரி பிரச்சாரம் அதிமுக-வுக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்தப் பிரச்சாரம் குறித்து பேசிய அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன், “கிராம அளவில் கட்சியின் ‘ஐடி விங்’ பொறுப்பாளர்களை நியமிக்க பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடந்த ஓராண்டாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தின் பெரிய கட்சி அதிமுக தான் என்பதால் ‘ஐடி விங்’கில் தற்போது அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். கட்சியின் மற்ற அணியினரை விட ஒருபடி மேலாகவே ‘ஐடி விங்’கை உற்சாகப்படுத்தி வருகிறார் எங்கள் பொதுச்செயலாளர்.
அவரது வழிகாட்டலில் செயல்படும் எங்களின் வலிமையை. ‘யார் அந்த சார்?’ விவகாரத்தில் மக்கள் பார்த்துள்ளனர். இனி இதுபோன்ற பிரச்சாரங்களை அதிமுக ‘ஐடி விங்’ அடிக்கடி முன்னெடுக்கும்; பழனிசாமியை முதல்வராக்கும் வரை ஓயாது” என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அ.தி.மு.க. ஐ.டி. விங் அசுர வேகத்தில் செயல்படுவது அ.தி.மு.க.வினரை உற்சாகப் படுத்தியிருக்கிறது.