தமிழகத்தில், ‘ஆன்லைன்’ வாயிலாக நடக்கும் பண மோசடி குற்றங்களை கட்டுப்படுத்த, மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் பின்னணியில் இருப்போரை கைது செய்ய, ‘திரைநீக்கு’ என்ற பெயரில், அதிரடி நடவடிக்கையை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் முடுக்கி விட்டுள்ளார்.
மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தலைமையில், மாவட்ட எஸ்.பி.,க்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாநிலம் முழுதும் சைபர் காவல் நிலையங்களில் பதிவான, 158 வழக்குகள் குறித்து, கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடந்தது.
விசாரணையில், சைபர் குற்றவாளிகள், 41.97 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. விசாரணையின் தொடர்ச்சியாக, 135 வழக்குகளில் தொடர்புடைய சைபர் குற்றவாளிகள், 78 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது நாடு முழுதும், 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய, ஏராளமான டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.