“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய், திமுகவை விமர்சித்து பேசிய பிறகு புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என திருமாவளவன் கூறினார்.
இந்நிலையில் அந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விசிக துணை பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஆதவ் அர்ஜூனா ஏற்பாட்டில் நடந்த விழாவில் விஜய் கலந்து கொண்டார். இதில் பேசிய விஜய், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடாமல் திருமாவளவனுக்கு கூட்டணி அழுத்தம் தரப்பட்டதாகவும் விஜய் குறிப்பிட்டார்.
அதே மேடையில் விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், பிறப்பால் முதல்வரை உருவாக்கும் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என திமுகவை கடுமையாக சாடியிருந்தார். கூட்டணிக்குள் இருக்கும்போதே, திமுகவை வெளிப்படையாக விமர்சித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பாக மாறியது.
விஜயின் கருத்துக்கு திருச்சி விமான நிலையத்தில் பதில் அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விஜயின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றார்.
மேலும் கட்சியில் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், ” ஆதவ் அர்ஜூனா கட்சி நலனுக்கு எதிராக பேசி வருவதாக நிர்வாகிகள் தலைமையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். வி.சி.க.வில் தலித் அல்லாத நிர்வாகிகள் மீதான குற்றசாட்டில் உயர் மட்ட குழு தான் முடிவு செய்யும். அதன்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
இதன் காரணமாக ஆதவ் அர்ஜுனா ஆறு மாத காலத்திற்கு கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது-.