நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த போது முதலில் வரவேற்றவர் சீமான். அவர் முதல் அரசியில் மாநாடு முடிந்தவுடன் விஜய்யை கடுமையாக ‘புரோ.. புரோ’ என விமர்சித்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய்க்கு எதிராகத்தான் நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் சந்தித்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில்தான் ‘நாளைக்கே தம்பி விஜய்க்கு சிக்கல் என்றால் நான் முதல் ஆளாக நிற்பேன்’ எனக் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபல தினசரி நாளிதழ் ஒன்றிற்கு விஜய் குறித்து சீமான் அளித்த பேட்டியில், ‘‘அண்ணன் தம்பி பாசம் வேறு. நானும் என் தம்பியும் கொள்கையில் முரண்படுவது வேறு. மொழி, இனம் என்று மக்களைப் பிரிக்கிறார்கள் என்று அவர் நேரடியாக எங்களை விமர்சனம் செய்கிறார்.

உலகம் முழுவதும் மொழி, இனம் அடிப்படையில் தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்க, இளைய தலைமுறை பிள்ளைகளிடம் இப்படி ஒரு கோட்பாட்டை விஜய் விதைப்பது தவறாகப் போய்விடும். ஆனால், விஜய் என் தம்பி என்பதில், அன்பிலும் பாசத்திலும் குறைவில்லை. நாளைக்கே விஜய்க்கு ஏதாவது ஒரு சிக்கல் என்றால் நான் தான் முதலில் நிற்பேன்’’ என்று கூறியிருக்கிறார்.

த.வெ.க. தலைவர் விஜய்க்கு சீமான் திடீர் ஆதரவு தெரிவித்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal