பிரபல தொழில் அதிபரும் எஸ்.ஆர். என்றழைக்கப்படும் மணல்¢ ராமச்சந்திரனின் தொழில் பார்ட்னருமான திண்டுக்கல் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்துவதுதான் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவரது வீடு மற்றும் அலுவலகம் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ளது இவர் தரணி குழுமம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் வீடு கட்டுமானம், ரியல் எஸ்டேட், செங்கல் டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் மணல் குவாரியில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக கடந்த 12.9.2023 அன்று ரத்தினம் வீடு மற்றும் அலுவலகம், அதே போல ஹனிபா நகரில் உள்ள ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வீடு மற்றும் அலுவலகத்திலும் இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 25.11.2023 அன்று ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து இன்று மூன்றாவது முறையாக ஜிடிஎன் சாலையில் உள்ள தரணி குழு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு கார்களில் வந்துள்ள 6 அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது முறையாக தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை ரெய்டின் பின்னணி குறித்து விசாரத்தோம். ‘‘சார், தமிழகத்தில் மீண்டும் மணல் ஒப்பந்தத்தை விட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த மணல் ஒப்பந்தத்தை எடுக்க நாமக்கல்லை சேர்ந்த இரட்டையர் (பொன்னர் & சங்கர்), டெல்டாவைச் சேர்ந்த ராசப்பா, தேவேந்திரன் ஆகிய இரண்டு குரூப்கள் முட்டி மோதின. இதில் ராசப்பா குரூப்புக்கு மணல் ஒப்பந்தம் கொடுத்தும், அவர்களால் ‘தலைமை’ கேட்ட பணத்தை கொடுக்க முடியவில்லை.

இந்த சூழ்நிலையில்தான் மீண்டும் மணல் ஒப்பந்தத்தை ‘ஆடிட்டர்’ ஒருவர் மூலமாக மீண்டும் பெற எஸ்.ஆர். குரூப் முயற்சி எடுத்தது. அந்த முயற்சிக்கு இன்னும் சில நாட்களில் வெற்றி கிடைக்கும் சூழ்நிலையில், எஸ்.ஆருக்கு முளையாக செயல்படும் திண்டுக்கல் ரத்திணத்தை அமுக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.

ஏனென்றால், தலைமைக்கு விட்டமினை கொடுப்பதற்காக ரத்திணம் தயாராக இருந்த நிலையில்தான் இந்த ‘சோதனை’ என்கிறார்கள்’’ ரத்திணத்திற்கு நெருக்கமான வட்டாரத்தில் உள்ளவர்கள்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal