‘அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், யாருக்கு எந்த வகையில் லஞ்சம் தரப்பட்டது என்பதை பற்றிய எந்த விவரமும் இல்லை. லஞ்சம் மற்றும் நீதித்துறைக்கு இடையூறு விளைவித்தல் குற்றச்சாட்டுகளில் கவுதம் அதானி, அவரது மருமகன் பெயர் இல்லை’ என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறினார்.
கவுதம் அதானி, பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், கடந்தாண்டு அறிக்கை வெளியிட்டு பகீர் கிளப்பியது. சமீபத்தில், அதானி தன் தொழில் திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலை பெறுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க தயாரானதாகவும், அந்தத் தகவலை மறைத்து, அமெரிக்கர்களிடம் கணிசமான முதலீடுகளை திரட்டி உள்ளதாகவும், அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அதானியை கைது செய்து ஆஜர்படுத்தவும் அந்நாட்டு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் மறுத்தது.
இந்த விவகாரம், இந்தியாவில் அரசியல் ரீதியாக பெரும் புயலை கிளப்பியுள்ளது. ‘அதானியை கைது செய்ய வேண்டும்’ என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். பார்லி கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (நவம்பர் 27) அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘அமெரிக்கா நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. அதானி, அவரது மருமகன் சாகர் அதானிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இல்லை. அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டப்படி அவர்கள் மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லை’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, ‘‘அதானி மீது குற்றம் சாட்டி வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல. அமெரிக்க அரசு வக்கீல்களின் குற்றச்சாட்டில் லஞ்சம் கொடுத்தது பற்றி குறிப்பிடப்படவில்லை. எந்த வகையில், யாருக்கு லஞ்சம் தரப்பட்டது என்பதும் குறிப்பிடப்படவில்லை. மொத்தம் முன் வைக்கப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளில், லஞ்சம், நீதித்துறைக்கு இடையூறு விளைவித்தல் தொடர்புடைய முதலாவது மற்றும் ஐந்தாவது குற்றச்சாட்டுகளில் கவுதம் அதானியும், அவரது மருமகன் சாகர் அதானியும் குறிப்பிடப்படவில்லை.
அவர்களது நிறுவன அதிகாரிகள் கூட குறிப்பிடப்படவில்லை. வேறு சிலரது பெயர்களே உள்ளன’’ இவ்வாறு முகுல் ரோகத்கி கூறினார்.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து, அதானி நிறுவனங்களின் பங்குகள் விலை உயரத் தொடங்கியுள்ளன.