“மலையாள சினிமாவில் படப்பிடிப்பு முடிந்ததும் நீங்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழலால் எல்லை மீறல்கள் நடக்கிறது” என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.
கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ‘சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்வில் நடிகை சுஹாசினி கலந்துகொண்டு பேசினார். அவர் கூறுகையில், “மற்ற துறைகளை காட்டிலும் வித்தியாசமானது சினிமா துறை. மற்ற துறைகளில் நீங்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்குச் சென்றுவிடலாம். ஆனால், சினிமாவில் அப்படியில்லை. 200, 300 பேர் ஓரிடத்துக்குச் சென்று அங்கேயே ஒரு குடும்பம் போல தங்கியிருப்பார்கள்.
அப்படி இருக்கும்போது, சில சமயங்களில், தெரிந்தோ, தெரியாமலோ எல்லைகள் மீறப்படும். படப்பிடிப்பு தளங்களில் எல்லை மீறுபவர்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என என் கணவர் மணிரத்னத்திடம் கேட்டேன். அவ்வாறு செய்த ஒருவரை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேற்றியதாக அவர் என்னிடம் கூறினார். ஒரு கிராமத்தில் 200 பேர் இருக்கும்போது, விதிகளை கடைபிடிக்காமல் இருக்கும்பட்சத்தில் அங்கே எல்லை மீறல் நிகழ்வதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு.
மலையாள திரையுலகில் இது தான் நடக்கிறது. தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு முடிந்தால் நான் சென்னைக்கு சென்றுவிடுவேன், தெலுங்கில் படப்பிடிப்பு முடிந்தால் ஹைதராபாத் சென்றுவிடுவேன், கர்நாடகாவில் என்றால் நான் பெங்களூரு சென்றுவிடுவேன். ஆனால் மலையாள சினிமாவில் படப்பிடிப்பு முடிந்தால் உங்களால் வீட்டுக்கு திரும்பிச் செல்ல செல்ல முடியாது. ஏனென்றால் அங்கே அப்படி ஒரு இடம் இல்லாததால் உங்களால் வெளியில் எங்கேயும் செல்ல முடியாது. இதன் காரணமாக தான் படப்பிடிப்பு தளங்களில் எல்லைகள் மீறப்படுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.