தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்று நாளை தனது 47வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

நவம்பர் 27-ம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘உதயநிதி உதயநாள் விழா’ என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார். அதே போல் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு உதவி செய்திருப்பதுதான், அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் உதயநிதி, ‘‘தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஃபிளெக்ஸ் பேனர் வைப்பதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள்.

இந்தப் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது.உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய இந்தப் பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில்கொள்ளுமாறு, உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்த நாளையொட்டி 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மாதிரி வினா & விடை பயிற்சி புத்தகங்களை வழங்கியிருக்கிறார்.

தென்காசி தெற்குமாவட்டத்திற்குட்பட்ட பூலாங்குளம், பாவூர்சத்திரம், மாதாப்பட்டினம், ஊத்துமலை, நெட்டூர், ரெட்டியார் பட்டி ஆகிய ஊர்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக 7,500 வினா, விடை மாதிரி புத்தகங்களை வழங்கியிருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தளவில் அதிகாரப் பதவிக்காக உள்குத்து அரசியலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மத்தியில், மாணவ, மாணவிகளின் கல்விக்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா உதவி செய்திருப்பதுதான் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal