நாம் தமிழர் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தனர். இதனால் கிட்டத்தட்ட கோவையில் நாம் தமிழர் கூடாரம் காலியாகி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் முகமாகமாவட்ட அளவில் இருந்த பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர். கட்சியின் முக்கிய தலைவர்கள் என்று கருதப்பட்ட பல உள்ளூர் தலைகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். அதிலும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வெளியேற தொடங்கி உள்ளனர். அதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கி உள்ளது. அந்த கட்சியில் மீண்டும் கட்சி மாறும் படலம் தொடங்கி உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் நெல்லை மாவட்ட நாதக இளைஞரணி தலைவர் பர்வீன் உட்பட நெல்லை நாதக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீமானிடம் வாக்குவாதம் செய்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அதோடு முக்கியமான நிர்வாகிகள் கட்சியில் இருந்தும் வெளியேறினர்.

இது குறித்து பர்வீன் பேசுகையில்.. ‘‘நான் 8 வருடமாக கட்சியில் இருக்கிறேன். பொறுப்பிலும் இருக்கிறேன். ஆனால் எங்களை பேச விடவில்லை. நீயெல்லாம் பேச கூடாது இங்கே’’ என்று கூறி ஆவணப்படுத்தி இருக்கிறார். மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் பின்னர் எதற்கு நடத்துகிறார்கள். நீயெல்லாம் பேசுவதற்கு யார் என்கிறார். நான்தான் இங்கே பொறுப்பு ஏஜென்ட். நான்தன 8 தொகுதிகளில் வார்டு வாரியாக வேலை பார்த்தேன்.

உனக்கும் கட்சிக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது.. வெளியே போடா.. நீ இருக்கனும் என்றால் இரு.. வெளியே போடா.. இது என் கட்சி என்றார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் பேச முயன்றேன். நான் கட்சி நிர்வாகிகள் சிலர் எங்களை அடிக்க வந்தனர். சீமானின் இந்த கோபம்தான்.. நிர்வாகிகளை அவர் நடத்தும் விதம்தான் கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேற முக்கிய காரணமாக மாறி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் வரும் நாட்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் வருகையே நாம் தமிழரில் பலர் வெளியேற மிக முக்கியமான காரணமாக மாறி உள்ளது. . தமிழக வெற்றிக்கழகம்.. அதிமுகவை எதிர்க்கிறது.. திமுகவை எதிர்க்கிறது.. பாஜகவை எதிர்க்கிறது. இது கிட்டத்தட்ட நாம் தமிழரின் ஸ்டைல்தான்.. இதை மனதில் வைத்தே நாம் தமிழர் நிர்வாகிகள் பலர் வெளியேறுவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அண்மையில் அறிவித்தனர். இதுதான் நாம் தமிழர் கட்சியின் பிரிவினைக்கு தொடக்க புள்ளியாக இருந்தது. கட்சியில் சீமான் தங்களின் பேச்சுக்கு மரியாதையே கொடுக்கவில்லை என்பதை காரணமாக கூறி இருந்தனர்.

அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கட்சியில் மேலும் பிரச்னையை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் யாரையும் தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சியின் சீமான் நினைக்கவில்லை. சீமான் இவர்களிடம் பேசாமல் போனதே இதற்கு முக்கிய காரணம். போனால் போகட்டும்.. கட்சி யாரையும் நம்பி இல்லை என்று சீமான் கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

நேற்றுதான் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம், கட்சியிலிருந்து விலகுவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கட்சியில் தனக்கு மரியாதையை இல்லை என்று கூறி இவர் வெளியேறி உள்ளார். இந்த நிலையில்தான் கோவையில் நாம் தமிழர் கட்சியினரை கூண்டோடு தூக்கியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal