தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் உள்ளார் என்றும், அவர் முதல்வரானால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார். ரவிக்குமாரின் இந்த பேச்சுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும்தான் ஆட்சி செய்து வருகின்றன. கூட்டணியில் ஆட்சி அமைக்கப்பட்டாலும், ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட்டதில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேட்கப்பட்டு வரும் விஷயம்தான். ஆனால், தோழமைக் கட்சிகளுக்கு இதுவரை அந்த கனவு தற்போது வரை நிறைவேற்றப்பட்டதில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட காலம் கழித்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பெரும் விவாதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்திருமாவளவன் கிளப்பியிருந்தார். அதன் பிறகு ஸ்டாலின் சந்திப்பு, மது ஒழிப்பு மாநாடு என அனைத்தும் வீரியம் இல்லாமல் மிகச் சாதாரணமாக நடந்து முடிந்துவிட்டன. அதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை சித்தாந்த எதிரி என்றும் குறிப்பிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு என்று ஒரு வெடிகுண்டையும் வீசியிருந்தார்.
இதனால், தமிழக அரசியல் வட்டாரமே களேபரமானது. மாநாடு நடத்தி முடிக்கப்பட்டும் விஜய் குறித்த விவாதம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையே ஆசை வார்த்தை கூறினால் தாங்கள் வந்துவிடுவோம் என விஜய் நினைப்பதாக கூறியிருந்தார், அவரது கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தார் திருமாவளவன். பழனியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நான் அரசியல் களத்திலே அடியெடுத்து வைத்தபோது எழுப்பிய முழக்கம், எளிய மக்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பது.
அதை அவ்வளவு எளிதில் எட்டிப் பிடித்துவிட முடியாது. நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தேன். நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று சொல்லி இருக்கிறேன். அப்படியென்றால் நானே முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. எளிய மக்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதையே அப்படிச் சொன்னேன். தமிழகத்தில் அரசியல் விதிகளை திருத்தக்கூடிய வலிமை பெற்றவர்களாக மாற வேண்டும். தென்னிந்தியா முழுவதும் சிறுத்தை கொடி பறக்கிறது.
மகாராஷ்டிராவிலும் இன்று சிறுத்தைக் கொடி பறக்கிறது, மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அதற்காக கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமனம் செய்துள்ளோம். இந்தியாவிலேயே எந்தக் கட்சியிலும் இவ்வாறு இல்லை. அந்தளவுக்கு துணிச்சலோடு இறங்கி இருக்கிறோம் என்று பேசினார். இந்நிலையில், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் உள்ளார் என்றும், அவர் முதல்வரானால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்பி ரவிகுமார் கூறியதாவது: திருமாவளவன் தேர்தல் அரசியலில் 25 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். அரசியல் பாதையில் 35 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு கட்சியை நிறுவி, அதனை இன்று தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக அவர் உருவாக்கி காட்டியிருக்கிறார். அத்தகயை ஆளுமைமிக்க தலைவர் முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டிற்கு அது நன்மை பயக்கும். எனவே, அப்படி சொல்வதில் எந்தவொரு தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசியபோது, ‘‘சார், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கிறது. சீட்கள் குறித்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்றெல்லாம் செய்திகள் வந்ததது.
இதற்கு விஜய் தரப்பில், ‘‘த.வெ.க. தலைமையில்தான் கூட்டணி… விஜய்தான் முதல்வர் வேட்பாளர்… அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை’’ என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் தி.மு.க.கூட்டணியில் இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆனால், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆகக்கூடாது. சினிமாவில் நடித்தவர்கள் எல்லாம் முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகாலம் அரசியலில் பயணித்தவர் முதல்வர் ஆகக்கூடாதா?’ என கேள்வி எழுப்பியிருந்தார் ஆதவ் அர்ஜுனா.
இந்த நிலையில்தான் முதல்வர் பதவி குறித்து ரவிக்குமார் பேசியிருப்பது. தி.மு.க. கூட்டணியில் இருந்து வி.சி.க. வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. காரணம், தி.மு.க. கூட்டணியில் இருந்தால் முதல்வராகவோ, துணை முதல்வராகவோ முடியாது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணிக்குச் சென்றால் திருமாவுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு. இந்த நிலையில்தான், வி.சி.க. தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், அந்தத் தலைவர்களின் பேச்சு அப்படியிருக்கிறது’’ என்றனர்.