தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை புறந்தள்ளி ஹிந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசைக் கண்டித்து முதல்வர் தலைமையில் நடந்த தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. தேர்தல் பணிகள் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை முடிவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • 2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜ., அரசு நிறைவேற்றவில்லை. மக்களுக்கு குறைந்தபட்ச நன்மை செய்யும் செயல்களை பா.ஜ., அரசு செய்ய வேண்டும். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி ஹிந்தி மாதம், வாரம் என விழா நடத்துவது, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்துவது உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • சட்டசபை தேர்தலுக்கு தயாராவோம். இன்று முதல் தேர்தல் பிரசார பணிகளை தொடங்குங்கள். துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொண்டர்கள் அனைவரும் துவங்க வேண்டும் என தீர்மானம்.
  • தி.மு.க., அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள், 2026ல் தி.மு.க., ஆட்சியை மீண்டும் மலர செய்வார்கள். தமிழகத்தை மேம்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி தீர்மானம்.
  • இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.
  • மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பா.ஜ., அரசும், மத்திய அரசும் மணிப்பூர் மாநிலத்தை கை கழுவி விட்டதாகவே தெரிகிறது. இரண்டு அரசுகளின் அலட்சியத்தின் காரணமாக இன்னும் எத்தனை உயிர்கள் இழக்கப்போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. பிரதமர் மோடி தனிக் கவனம் செலுத்த வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தி தீர்மானம்
  • மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50% நிதி பகிர்வு அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கு 50% நிதியை மத்திய அரசு தர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal