‘‘உண்மையான நீதித்துறை சுதந்திரம் என்பது நீதி எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து சொல்வது தான்; ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பளிப்பது அல்ல’’ என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியான சந்திரசூட் வரும் நவ.,10ம் தேதி ஓய்வு பெற உள்ளார். அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு, அளித்த பேட்டியில், ‘‘அரசியல் அமைப்பில் முதிர்ச்சி உணர்வு இருக்க வேண்டும், இதைப் புரிந்துகொண்டு நமது நீதிபதிகளை மக்கள் நம்ப வேண்டும். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, எனது வீட்டுக்கு பிரதமர் மோடி வந்ததில் எந்த தவறும் இல்லை. நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறை சேர்ந்தவர்களுக்கு இடையே இது போன்ற சந்திப்புகள் சில நேரங்களில் நடைபெறுகின்றன.
ஜனாதிபதி மாளிகையிலும், குடியரசு தினம் போன்ற நேரங்களிலும் இத்தகைய சந்திப்புகள் நடைபெறுகின்றன. பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் நீதிபதிகள் தொடர்ந்து கலந்துரையாடுகின்றனர். இந் நீதிபதிகள் விசாரிக்கும் வழக்குகளை பற்றிய சந்திப்பு கிடையாது.வாழ்க்கை மற்றும் சமூகம் குறித்து பொதுவாக பேசுவோம். ஜாமின் கோரி வருபவர்களுக்கு விசாரணை நீதிமன்றங்கள் வழங்க தயங்குவது எனக்கு பெரும் கவலை அளிக்கிறது.
ஜாமின் என்பது விதிவிலக்காக இல்லாமல், விதியாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஏ முதல் இஸட் வரை யார் கேட்டாலும் ஜாமின் கொடுத்திருக்கிறேன். அர்ணப் கோஸ்வாமி முதல் ஜூபேர் வரை ஜாமின் கொடுத்திருக்கிறேன். நீதித்துறை அரசியலமைப்பு சட்டப்படி வழிநடத்தப்படுகிறது. உண்மையான நீதித்துறை சுதந்திரம் என்பது ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பளிப்பது அல்ல. நீதி எங்கு உள்ளது என்பதை தீர்மானிக்கும் சுதந்திரத்தை நீதிபதிகளுக்கு வழங்குகிறது’’ இவ்வாறு சந்திரசூட் கூறினார்.