கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே டி. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியில் இன்று (நவம்பர் 5ம்தேதி) ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், குறைகள் மற்றும் நிறைகளை கண்டறிவதற்காக 234/ 77 என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை தொடங்கி உள்ளது. இதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு பள்ளிகளில் உள்ள குறைகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன், வாசிப்பு திறன்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனேகொள்ளு ஊராட்சிக்குட்பட்ட டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி, தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘எங்கள் பள்ளியில் 33 பேர் படிக்கின்றனர். அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை நன்றாக வாசிக்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்கிறீர்கள். கிருஷ்ணகிரிக்கு வரும் போது, எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களின் கற்றல் திறன்களை ஆய்வு செய்ய வேண்டும்’ என அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு அமைச்சர், ‘தங்கள் பள்ளிக்கு விரைவில் ஆய்வு செய்ய வருகிறேன்’என பதிவு செய்திருந்தார்.

அதன்படி , 234/ 77 என்ற திட்டத்தின் கீழ், தனது 229 ஆவது ஆய்வை தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கும்மாளபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் கன்னட மொழி வழியாக கல்வி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளில், அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (நவ.5) மேற்கொண்டார் . இதன்பின்னர், தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும் வந்து, மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புதிறன்களை ஆய்வு செய்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக அமைச்சரிடம் பேசினர். இதைக் கேட்ட அமைச்சர், அரசுப் பள்ளி வளர்ந்துள்ளதாக பெருமிதம் அடைந்தார். பின்னர் தலைமை ஆசிரியரைப் பாராட்டினார். இதனையடுத்து கோரிக்கையை ஏற்று பள்ளிக்கு வந்த அமைச்சருக்கு தலைமை ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார். இந்த ஆய்வின் போது எம்எல்ஏ-க்கள் பிரகாஷ், ராமச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ( பொறுப்பு) முனிராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal