தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க.வில் உச்சக் கட்ட கோஷ்டி பூசல் இருப்பதாக உண்மையான உடன் பிறப்புக்கள் புலம்பித் தவித்து வருகின்றனர். நீதிமன்றமே உத்தரவிடும் நிலைக்கு, இத்தொகுதியின் நிலைமை இன்றைக்கு இருக்கிறது.
சமீபத்தில்தான், திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,வைச் சேர்ந்த சேர்மன் பூங்கோதை, தி.மு.க., துணை சேர்மன் மாரி வண்ணமுத்து உள்ளிட்ட அக்கட்சியினரே, வன்கொடுமை செய்ததாக கூறி தனது சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில்தான், ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி திமுக தலைவர் சுதா தனது பெயரில் உள்ள சொத்து வரிகளை செலுத்தாத காரணத்தால் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு பேரூராட்சிகள் இயக்குனருக்கு ஆணை பிறப்பித்துள்ளது. தற்போது மேற்கண்ட ஆணையை 3 மாத காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க.வில் என்ன நடக்கிறது என நடுநிலையான மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியைப் பொறுத்தளவில் மக்களிடம் நல்ல செல்வாக்கும், நன்மதிப்பும் பெற்றவர் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வில் சீனியர் அமைச்சர்களே தோல்வியைத் தழுவிய நிலையில், பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் வெறும் 399 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதற்கு காரணம் தி.மு.க.வில் நடந்த ‘உள்குத்து’ அரசியல்தான்.
அதே போல் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வில் நடந்த ‘உள்குத்து’ அரசியலால் தோல்வியைத் தழுவினார் பூங்கோதை ஆலடி அருணா. 2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானவுடன் ஆலங்குளம் தொகுதிக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தவர். தற்போது, அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையிலும் கலைஞர் நுற்றாண்டு விழா, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எந்தவித எதிர்பாப்பும் இன்றி செய்து வருகிறார். அதே போல் பள்ளிக் குழந்தைகளுக்கும் உதவிகளை செய்து வருகிறார். மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஆனால், கட்சி நிர்வாகிகள் உள்குத்து அரசியல் செய்து வருகிறார்கள்.
தற்போது, இங்குள்ள கோஷ்டிப் பூசலால் அவர் புறக்கணிக்கப்பட்டு, தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. இதனால், ஆலங்குளம் தொகுதி தி.மு.க.வில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல் நிலவுகிறது. இவர் அமைச்சராக இருந்தபோது, தொகுதியில் எந்தவொரு பிரச்னையும் எழாமல் பார்த்துக்கொண்டார். தற்போது, வேண்டுமென்ற ஒரு கோஷ்டி இவரை புறக்கணிப்பு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், கட்சிக்கு விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பூங்கோதை ஆலடி அருணா உட்கட்சி அரசியலில் தலையிடுவதில்லை. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ‘பொறுப்பு’ அமைச்சர் என பெயருக்குத்தான் இருக்கிறார்.
ஆலங்குளம் தொகுதி தி.மு.க.வில் இதே கோஷ்டி பூசல் நீடித்தால், இத்தொகுதி நிரந்தரமாக அ.தி.மு.க. வசமாகிவிடும். எனவே, முன்பிருந்த ஆலங்குளம் தொகுதியாக மாற தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.
துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் நடக்கும் கோஷ்டி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா..?