திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஸ்டாலின் குமார். இவருக்கு எதிராக துறையூர், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் செயல்பட்டதை அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்ததால், வைரிசெட்டிப் பாளையத்தில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் ஒன்றியச் செயலாளர்கள் ‘அழையா’ விருந்தாளியாக திடீரென்று எம்.எல்.ஏ. நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கின்றனர்.

சரி, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒ.செக்களுக்கும் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாருக்கும் என்ன பிரச்சனை? எதற்காக எம்.எல்.ஏ.நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறார்கள்? கட்சியின் நிலைமை அங்கு எப்படி இருக்கிறது? என்பது பற்றி நடுநிலையான மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், அமைச்சர் கே.என்.நேரு மீது லால்குடி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.க்கள் முதல்வரிடம் புகார் கொடுத்ததாக கூறப்பட்டது. அதே போல் துறையூர் எம்.எல்-.ஏ.வும் புகார் கொடுத்ததாக தகவல் பரவியதால், அமைச்சர் கே.என்.நேருவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரின் நிகழ்ச்சிகளை ஒ.செ.க்கள் புறக்கணிக்கத் தொடங்கினார்கள்.

அதாவது, கே.என்.நேருவிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக சமீபத்தில் திருச்சியில் காவல்நிலையத்தில் புகுந்து தி.மு.க. நிர்வாகிகள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தி.மு.க. தலைமைக்கே அவப்பெயரை ஏற்படுத்தியது என்பதையும் மறுக்க முடியாது. அதே போல்தான் இங்கும் நடக்கிறது கட்சிக்குள்!

இப்படி, தாங்கள் செய்யும் தவறுகளையும், முறைகேடுகளையும் மறைப்பதற்காக கே.என்.நேருவிற்கு தீவிர விசுவாசியாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.

சமீபத்தில் பச்சைமலையில் பழங்குடியின விவசாயிகளுக்கு கால்நடைகள் மற்றும் விவசாய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார் தலைமையில் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பயனாளிகள் யாரும் நிகழ்ச்சிக்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். இதனால், நிகழ்ச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ. மிகுந்த வருத்தத்துடன் சென்றார்’’ என்றவர்கள் அடுத்த சொன்னதுதான் அதிர்ச்சி ரகம்.

அதாவது, சார் ‘‘ பத்து வருடமாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ஸ்டாலின் குமார். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஆனால், தி.மு.க. ஆளுங்கட்சியாக வந்த பிறகு சேர்மனாக இருப்பவர்களுக்கும், ஒ.செ.க்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் வாரிக்குவித்த சொத்துக்கள் ஏராளம். பினாமி பெயர்களில் டாரஸ் லாரிகள், ஹிட்டாச்சிகள் (வண்டிகளின் பதிவு பினாமி பெயரில் இருந்தாலும், வாகனத்தில் தங்கள் பெயர்களை வைத்திருப்பார்கள்) நிலங்கள் என ஏராளம். ஏன், தாங்கள் வாங்கிய நிலத்திற்காக புறம்போக்கு நிலத்தில் சாலைப் போட்ட விவகாரமும் இருக்கிறது. (இதையெல்லாம் புகைப்பட ஆதாரத்துடன் மத்திய உளவுத்துறைக்கு நோட் அனுப்பப்பட்டிருக்கிறது)

இப்படி ஒ.செ.க்களும், சேர்மன்மகளும் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என முடிந்தளவு மூன்றாண்டுகளில் குறுக்கு வழியில் சம்பாதித்து விட்டனர். தவிர, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கூட டாஸ்மாக், கமிஷன் விவகாரங்களில் கறாராக இருந்தார். ஆனால், தற்போதையே எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் எதையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், இவர்கள் வாரிச்சுருட்ட ஆரம்பித்து விட்டார்கள். எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார் கறாராக இருந்தால், இப்படி வாரிச் சுருட்டியிருக்க முடியாது.

இப்படி வாரிச்சுருட்டுபவர்கள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக செயல்படும் தகவல் கே.என்.நேருவுக்கு செல்ல, அவர் எச்சரித்த பிறகுதான் எம்.எல்.ஏ.வின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். காரணம், கே.என்.நேருவை கடுமையாக எதிர்த்த குடமுருட்டி சேகரே தற்போது நேருவின் பக்கம் நிற்கிறார். இப்படி கே.என்.நேருவுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக்கொண்டு, தி.மு.க. தலைமைக்கு அவப்பெயர் எடுக்கும் ஒ.செ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர் வருத்தத்துடன்.

வலைதளங்களில் வரும் வதந்திகள் வருத்தமடையச் செய்கிறது என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! வலைதளங்களில் வரும் உண்மை தகவல்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே உண்மையான உடன்பிறப்புக்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal