வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் சீனியர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் கசிகிறது.
தி.மு.க., முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பொன்முடி. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர். சமீபத்தில், பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித் துறை பறிக்கப்பட்டு, வனத்துறை வழங்கப்பட்டது.
விழுப்புரத்தில் நடந்த தி.மு.க., நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், எனக்கே கூட சீட் கிடைக்காமல் போகலாம். ஆனால், தலைவர் ஸ்டாலின் யாரை தேர்தலில் வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவருக்காக நீங்கள் உழைக்க வேண்டும்” என்றார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரணையில் இறங்கினோம். ‘‘சார், எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜனிகாந்த், ‘ஓல்டு ஸ்டூடன்ஸ் கிளாஸை விட்டு போக மாட்டேன்கிறார்கள்… அதிலும் துரைமுருகன் இருக்காறே… கலைஞர் கண்ணுலையே விரலைவிட்டு ஆட்டியவர்…’’ என்றார். இது பெரிய சர்ச்சையாக வெடித்து, ஸ்டாலினின் கோபப்பார்வை துரைமுருகன் மீது பட, அதன் பிறகு வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்.
இந்த நிலையில்தான் பொன்முடி விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், ‘எனக்கே சீட் கிடைக்காமல் போகலாம்… யாருக்கு தலைமை சீட் கொடுக்கிறதோ, அவர்களை வெற்றி பெற வைக்கவேண்டும்’’ என்றார். ஏற்கனவே பொன்முடியின் மகன் கௌதம சீகாமணி விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார். அவர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால், பொன்முடிக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற தகவல் அவருக்கு தெரிந்ததோ, தெரியவில்லையோ மனதில் வைக்காமல் ஓபனாக பேசிவிட்டார்.
அதே போல்தான், வேலூரில் ஆண்டாண்டு காலமாக கோலோச்சி வருகிறார் துரைமுருகன். இதனால், அங்குள்ள இளவயது தி.மு.க.வினர் முன்னுக்கு வராமலேயே போய்விட்டனர். அவரது மகன் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். எனவே, துரைமுருகனுக்கே போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்.
அதே போல், மலைக்கோட்டை மன்னராக வலம் வருபவர் கே.என்.நேரு.! இவர் தி.மு.க.விற்கு எதிராக பேசியதாகவே இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தலைமை இது குறித்து விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. இவரது மகன் அருண் நேரு பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யாக இருப்பதால், இவருக்கும் சீட் கிடைக்க வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே?
அடுத்தது ஐ.பி. என்றழைக்கப்படும் ஐ.பெரியசாமி. இவரது மகன் செந்தில் குமார் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். அடுத்து தி.மு.க. தலைமை இவரை அமைச்சராக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதற்கு ஐ.பி.யும் ஒத்துக்கொண்டதாக ஒரு தகவல்..! ஏனென்றால், இரண்டாவது முறையாக ஐ.பி.செந்தில் குமார் எம்.பி.யாகியிருக்கிறார்.
இதே போல், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உள்ளிட்ட சீனியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்..!