கேரளா, கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமான நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கேரளாவின் கண்ணனூர் துணை கலெக்டர் நவீன் பாபுவின் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றவர்கள், புகழ்ந்து பேசி அவரது செயல்பாடுகளை நினைவுகூர்ந்தனர். ஆனால், இந்த நிகழ்வில் அழையா விருந்தாளியாக பங்கேற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.பி.திவ்யா, நவீன் பாபு மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இதனால், மனமுடைந்து போன நவீன் பாபு, கடந்த 15ம் தேதி, தான் தங்கியிருந்த குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார்.
நவீன் பாபுவின் மரணத்திற்கு காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், திவ்யாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, நவீன் பாபுவை தற்கொலைக்கு தூண்டியதாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து திவ்யாவை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கே.கே., ரத்னகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, பதவி நீக்கம் குறித்து திவ்யா பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த விவகாரத்தில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். சட்டப்பூர்வமாக என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பேன். கட்சி என் மீது எடுத்துள்ள இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறேன்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.