மழையால் அவதிப்பட்டு வரும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த கோரிக்கையை வைத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘‘நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்’’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தாலும், தாழ்வான இடங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே உணவு வழங்க இயலும்.

எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வயிறார உண்பதற்கு வசதியாக, எங்களது ஆட்சிக் காலங்களில் மேற்கொண்டது போல், அம்மா உணவகங்களில் மூன்று நேரமும் தரமான உணவை வழங்க உனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இன்னும் உணவு வழங்கப்படவில்லை என்று அங்குள்ள மக்கள் கூறுவதை ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. எனவே, உனடியாக அவர்களுக்கு உணவு வழங்க வலியுறுத்துகிறேன்.

கடந்த 41 மாத கால திரு. ஸ்டாலினின் திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் முறையாகத் திட்டமிடாமல், கேபிள்கள் அமைப்பது, கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் என்று எங்கு திரும்பினாலும் சாலைகள் உடைக்கப்பட்டு, முச்சந்திகளிலும் பெரும் பள்ளம் (ஜங்ஷன் பாயிண்ட்) தோண்டப்பட்டு அவைகள் சரியாக மூடப்படாமல் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி பல விபத்துக்களும், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட சென்னை மயிலாப்பூரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் விழுந்து மரணமடைந்ததை அனைவரும் அறிவார்கள்.

இத்தகைய நிர்வாகத் திறமையற்ற ஒரு அரசை தமிழ் நாட்டு மக்கள் இதுவரை கண்டதில்லை. எனவே, இனியும் இந்த ஏமாற்று விளம்பர அரசை நம்பாமல், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நான் முன்பே குறிப்பிட்டதைப் போல் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், குடிதண்ணீர், பால், தேவையான மருந்துப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளவும், குறிப்பாக, குடிநீரை காய்ச்சிப் பருகவும் வேண்டும். தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளியே செல்லும்போது, பாதையை கடக்கும் சூழ்நிலையில் மின்சார கேபிள்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இக்கட்டான தருணத்தில்,@AIADMKOfficial நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இந்த கனமழையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை எப்போதும் போல் முன்னின்று செய்து, அவர்களின் துயர் துடைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் திரு. ஸ்டாலினின் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன? என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலிறுத்துகிறேன். திரு. ஸ்டாலினின் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

எது எப்படியோ எடப்பாடியார் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் முதல்வர் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal