மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘ நடிகர் விஜய், புதிதாக கட்சித் துவங்கி அரசியல் செய்ய நினைக்கிறார். அதனால், அவர் ஹிந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வார் என எதிர்பார்த்தோம்; சொல்லவில்லை.

அதேநேரம் மற்ற மதத்தினர் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் பொதுவான ஒருவராக இருக்கப் போவதில்லை என, அவரே தன் செயல்பாடுகள் வாயிலாக காட்டி உள்ளார்.

முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார். ஆனால், எதிர்பார்த்த முதலீடுகள் வந்து சேரவில்லை. அதை மறைக்க திட்டமிட்டு, திருமாவளவனும், ஸ்டாலினும் இணைந்து நாடகத்தை நடத்தி கொண்டிருக்கின்றனர்.

முதலீடுகளை பற்றி கேள்வி கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இருவரும் நடத்தும் நாடகம் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் அவர் சந்தித்த பல நிறுவனங்கள், இங்கு ஏற்கனவே தொழில் துவங்கி நடத்தி வருபவைதான். அந்த நிறுவனங்களோடு புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என்றால், அதை இங்கேயே போட்டிருக்கலாம். ஏற்கனவே ஸ்பெயின், துபாய் சென்றது தொடர்பாக, முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும், அவர் அதை செய்யவில்லை

முதலீடுகளை ஈர்க்கப்போவதாகச் சொல்லி, அமெரிக்கா சென்ற முதல்வர், சொன்னபடி செய்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது. அதனால், எவ்வளவு முதலீடு வந்தது, எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தெல்லாம் உண்மையை சொல்லியாக வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அதனால், தமிழகத்திலும் கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று சொல்லித்தான், கடந்த 2021க்கு முன் தி.மு.க., ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தது; தேர்தல் அறிக்கையிலும் கூறிஉள்ளனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை அதிகரித்து, மது வாயிலாக வரும் வருமானத்தை பெருக்கி உள்ளனர். இவ்வளவு காலம் அதையெல்லாம் வேடிக்கை பார்த்த திருமாவளவன், திடீரென அதை எதிர்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு, ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு (இருவரும் மது ஆலை அதிபர்கள் என்பதால் தானே) இருவரையும் தி.மு.க., தலைமை அனுப்புவதாக சொல்லி இருக்க வேண்டும்’’இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal