கடந்த ‘தமிழக அரசியல்’ இதழில், ‘வனத்துறையில் வடமாநில அதிகாரிகளின் ஆதிக்கம்..! ஆன்லைன் டிரான்ஸ்பரில் முறைகேடு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வேளச்சேரியில் உள்ள தலைமை வன அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடந்த நிலையில், ஆன்லைன் டிரான்ஸ்பர் குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறார் அமைச்சர் மதிவேந்தன்.

இந்த நிலையில்தான், வனத்துறையில் ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் பலர் பணியில் சேராமலும், சிலர் நீதிமன்றங்களை நாடியும், மருத்துவ விடுப்பிலும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால், வனத்துறை பணியில் சில இடங்களில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக வனத்துறை வட்டாரத்தில் பேசியபோது, ‘‘சார், வனத்துறையில் டி.ஜி.பி. அந்தஸ்தில் 12 ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் உள்ளனர். மிகவும் அதிகாரம் உள்ள தலைமைப் பதவியான வனப்படை தலைவர் பதவியில் இருக்கும் அதிகாரி மிகவும் நேர்மையாக செயல்படக்கூடியவர். இவர் இந்தமாதம் ஓய்வு பெறும் நிலையில் உள்ளார்.

இவருக்கு அடுத்து அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவர் மீது சில பல குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மீது அமைச்சர் தரப்பே நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாகவும் தகவல்கள் வருகிறது. காரணம், அமைச்சரை மீறிய செல்வாக்கு படைத்த நபராகவும் இருக்கிறாராம். அதிகாரிகள் டிரான்ஸ்பர் விஷயத்தில் அமைச்சராலேயே நேரடியாக சில நேரங்களில் தலையிட முடிவதில்லையாம்.

தமிழகத்தில் அனைத்து துறையிலும் கவுன்சிலிங் முறை மற்றும் நிர்வாக நலன் சார்ந்து பணியிட மாறுதல்கள் வழங்கப்படும். ஆனால், வனத்துறையில் மட்டும்தன் ஆன்லைனில் டிரான்ஸ்பர் வழங்கப்படுகிறது. இதில் பல லட்சங்கள் புழங்குகிறது. யார் ‘அதிகமாக’ கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விருப்பப்பட்ட இடம் கொடுக்கப்படுகிறது. மற்றவர்கள் வேறு இடத்திற்கு உடனடியாக தூக்கியடிக்கப்படுகிறார்கள்.

வனத்துறை அதிகாரிகளின் மனைவி மற்றும் குழந்தைகள் படிப்பைப் பற்றி கவலைப்படாமல் பணிமாறுதல் வழங்குகின்றனர். இதனால், குழந்தைகளின் படிப்பும், எதிர்காலமும் சில சமயங்களில் கேள்விக்குறியாகிவிடுகிறது. பணிமாறுதல் வழங்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக சென்று பணியில் சேர முடியவுமில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அதிகாரிகள் பலர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். சிலர் நீதிமன்றங்களை நாடி அவர்களுக்கு சாதமாக தீர்ப்பு வாங்கினாலும், அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கப்படுவதில்லை. எனவே, வன அதிகாரிகளின் இடமாறுதல்களில் அமைச்சரை மீறிய ‘சக்தி’யாக செயல்படுவது யார்? என்பதை கண்டறிந்து வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

வனத்தை பாதுகாக்கும் வன அதிகாரிகளின் குடும்பத்தை முதல்வர் பாதுகாப்பாரா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal