‘‘செயலில் வேகம், சொற்களில் கவனம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள்’’ என இன்றிரவு அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 10:00 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்கிறார். முதல்வர், அடுத்த மாதம் 14ம் தேதி சென்னை திரும்புகிறார். அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுக்க உள்ளார்.

மக்களிடம் நற்சான்றிதழை பெற அமைச்சரவை கூட்டத்திலும், மாவட்ட செயலாளர் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளேன். செயலில் வேகம், சொற்களில் கவனம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள். கடல் கடந்து சென்றாலும், கவனம் எல்லாம் தமிழகத்தின் மீது தான் இருக்கும்.

விமர்சனம், விவாதம் செய்பவருக்கு நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்கள் பதில்களாக அமையட்டும். ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய உங்களில் ஒருவனாக பயணிக்கிறேன். தமிழகம் சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்.

அயல்நாடு சென்றாலும், தமிழகத்தில் எந்த ஒரு பணியும் தடைபடாமல் நடைபெற வேண்டும்.பயணத்தின் நோக்கம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பல தலைமுறைகளுக்கு பயன் தர வேண்டும் என்பது தான். அரசு நிர்வாகம் தொய்வின்றி தொடர அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வலியுறுத்துகிறேன். ஆட்சிப்பணி, கட்சிப் பணிகளை ஒருங்கிணைந்து கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal