அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருவதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தன்னை விமர்சித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பதிலடி கொடுத்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து பதவி பெற்றவர், தற்குறி என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன், அண்ணாமலை மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவமனாப்படுத்தும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் அண்ணாமலை பேசுவதாக தெரிவித்துள்ளார்.
மதுரை காவல் ஆணையர் லோகநாதனை சந்தித்து இந்த புகார் மனுவை அளித்துள்ளார். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வரும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரவணன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலை மீது அதிமுக மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் புகார் அளித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து பேசினோம். ‘‘அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசுகிறார் . ஏற்கனவே, ஜெயலலிதாவுடன் தனது மனைவியை ஒப்பிட்டு பேசியதும் வன்மையாக கண்டிக்கத்தது.
ஏற்கனவே, தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். ஆனால், அதன் மீது இன்றுவரை நடவடிக்கை இல்லை. தி.மு.க.வுடன் மறைமுகமாக உறவை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. அரசியலில் ஒரு தலைவரை எப்படி பேசவேண்டும் என்பதை முதலில் அறிந்து கொண்டு பேசவேண்டும். அவர் கட்சியல் உள்ள தமிழிசை சௌந்தர்ராஜனே, எடப்பாடி குறித்து அண்ணாமலை பேசியது தவறு என்ற தொனியில் பேசினார். எனவே, இனியும் அண்ணாமலை இப்படி பேசினால், அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயத்தமாகிவருகிறார்கள்’’ என்றனர் ஆவேசமாக!