மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான மாஜி முதல்வரின் மகள் கே.கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது ஈடி, சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவின் மகளான எம்எல்சி கே.கவிதாவை, கடந்த 11 மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறை கைது செய்தது. அதேபோல் சிபிஐயும் கே.கவிதாவை கைது செய்தது. டெல்லி திகார் சிறையில் கே.கவிதா அடைக்கப்பட்ட நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வரும் ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கே.கவிதா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கே.கவிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி, அவருக்கு எதிரான விசாரணையை ஏற்கனவே விசாரணை அமைப்புகள் முடித்துவிட்டதாகக் கூறி ஜாமீன் கோரினார்.

மேலும் இந்த இரண்டு வழக்குகளிலும் இணை குற்றவாளியான ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவர் குறிப்பிட்டார். அப்போது நீதிபதிகள், கே.கவிதா குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயிடம் என்ன ஆதாரம் உள்ளது? என்றும், அதன் விபரங்களை காட்டுமாறும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், தொடர் விசாரணைக்கு பின்னர் கே.கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதே போல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal