தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் வரும் 20-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,

‘‘திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், தி.மு.க. ஆட்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்கும், சாலையில் செல்வதற்கும் லாயக்கற்ற நிலையில் உள்ளது.

மேலும், சாலைகளில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் விபத்துக்குள்ளாவதாகவும், இங்கு ஏற்படக்கூடிய காற்று மாசு காரணமாக சுவாசக் கோளாறு மற்றும் சரும பிரச்சினைக்கு ஆளாவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

சொத்து வரி, வீட்டு வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்புக் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை தி.மு.க. அரசின் உத்தரவுப்படி மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

எனது தலைமையிலான அம்மா ஆட்சியின்போது, மக்கள் நலன் கருதி திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு நலத் திட்டப் பணிகள், பல சமூக நலத் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன.

ஆனால் தி.மு.க. அரசு பதவியேற்றது முதல், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க. அரசைக் கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 20.8.2024 செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப. மோகன் தலைமையிலும்; திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன் னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் ஏராளமான உள்ளடிவேலைகளைத் தாண்டி, அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளராக திறம்பட செயல்படக்கூடியவர் ஜெ.சீனிவாசன்! எடப்பாடி பழனிசாமியின் கண்டன ஆர்ப்பாட்ட அறிவிப்பைத் தொடர்ந்து 20ம் தேதி ‘மாஸ்’ காட்ட ஆயத்தமாகி வருகிறாராம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal