முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, இவர் தென் மாவட்டங்களில் முக்கிய தளபதியாக விளங்கினார். திமுகவை கோட்டையாக தென் மாவட்டங்களை உருவாக்கியதில் அழகிரியின் பங்கும் உண்டு. இந்த நிலையில் தான் 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் மத்தியில் காங்கிரஸ் கட்சியோடு திமுக கூட்டணி அமைத்தது. அப்போது 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றி பெற்ற அழகிரி மத்திய அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவி வகித்தார்.
இதனையடுத்து சில ஆண்டுகளுக்கு பிறகு கட்சியில் அதிகாரம் செலுத்துவதில் அண்ணன் தம்பியான அழகிரி, ஸ்டாலின் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது ஸ்டாலினுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த கருணாநிதி கட்சியில் இருந்து அழகிரியை நீக்கினார். இதனால் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. அழகிரி தனி அணியாக செயல்பட முடிவெடுத்து கட்சி நிர்வாகிகளை அழைத்து கூட்டங்களையும் நடத்தினார். அவ்வப்போது ஸ்டாலினுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வந்தார். இந்தநிலையில் தான் இரண்டு பேரின் மோதலால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அழகிரியை குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்தனர்.
அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கிளவுட் நைன் மூவீஸ் என்ற பெயரில் திரைப்படம் தயாரிப்பு மற்றும் திரைப்படத்தை வாங்கி விநியோக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது தயாரிப்பின் கீழ் வெளியான பல படங்கள் பெரிய ஹிட் அடித்தது. இதனையடுத்து 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பெரிய அளவில் படம் தயாரிப்பு பணியில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு தயாநிதி அழகிரி வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்த தயாநிதி அழகிரி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 4 மாத காலம் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சையில் சரியாக முன்னேற்றம் ஏற்படாததையடுத்து வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு முறை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சென்று தயாநிதி அழகிரியின் உடல்நிலை தொடர்பாக கேட்டறிந்தார்.
அவ்வப்போது தயாநிதி அழகிரி உடல்நிலை தொடர்பாக வதந்திகளும் பரவி வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தயாநிதி அழகிரிக்கு கொலை மிரட்டல் விடுத்து இமெயிலில் மிரட்டல் கடிதம் வந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் தயாநிதி அழகிரி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு முன்பாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தயாநிதியின் அழகிரியின் உடல்நிலை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து சிகிச்சை எடுத்துவரும் நிலையில் தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பிஸியோதெரபி சிகிச்சை கை கொடுத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது நல்ல நிலையில் கை மட்டும் கால்களை இயக்கி வருவதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் தயாநிதியின் அழகிரியின் உடல்நிலை முன்னேற்றம் திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.