தமிழக அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் நீதிமன்றம் அளித்த விடுதலை தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதன் இறுதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு பொன்முடியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து சிக்கலை உருவாக்கும் சொத்து குவிப்பு வழக்கால் பதவி தப்பிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக அமைச்சர் பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் என முக்கிய நபர்கள் சிக்குவதால் தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்பாக உள்ளது. அந்த வகையில் 2006 – 2011 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியை இழந்தார்.
உச்சநீதிமன்றம் சென்று மீண்டும் தனது பதவியை திரும்ப பெற்றார். இதனால் ஓரளவு நிம்மதி அடைந்த பொன்முடிக்கு மீண்டும் செக் வைத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 1996 -2001 காலகட்டத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி 1.36 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக பொன்முடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பல கால கட்டங்களை கடந்து வேலூர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லையென கூறி, பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொன்முடி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கு எதிர்கொள்ள உத்தரவிட்டது. இதனால் வேறு வழியின்றி மீண்டும் வழக்கு விசாரணையில் பங்கெடுத்தார்.
மேலும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் நீதிமன்ற நீதிபதியும் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் கடந்த மாதம் வழக்கு வந்த போது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே இன்றைய இறுதி விசாரணையின் போது அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு எப்படி செல்லும் என அறிய திமுக மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரம் காத்துள்ளது.