பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கெடு விதித்தார்.

மேற்குவங்கம், கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: கோல்கட்டா சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் உண்மையை மறைக்க முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்.

நாளைக்குள் சி.பி.ஐ., விசாரணையை நடத்தி முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இடதுசாரி மற்றும் பா.ஜ.,வினர் மேற்கு வங்கத்தில் வங்கதேச பாணியில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

மருத்துவ கல்லூரியை பா.ஜ.,வினர் தான் அடித்து நொறுக்கினார்கள் என்பது எனக்கு தெரியும். பா.ஜ.,வினர் தேசிய கொடியுடன் அங்கு சென்றுள்ளார்கள். அவர்கள் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் பா.ஜ.,வினருக்கு உள்ள தொடர்பை நிச்சயம் அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal