பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நினைவுதினம் இன்று என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வசித்து வந்த பெரம்பூர் மற்றும் ஆற்காடு சுரேஷ் வசித்து வந்த புளியந்தோப்பு பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 15ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இவர் ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழித் தீர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதாவது ரவுடி ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஆம்ஸ்ட்ராங் முழு காரணமாக இருப்பார் என அவருடைய குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் கருதி வந்ததாக தெரிகிறது. இதனால்தான் ரவுடி பிறந்த நாளான ஜூலை 5ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ரவுடி சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும் ஒருவர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கை, ஆற்காடு சுரேஷின் பிறந்த நாள் அல்லது நினைவு நாளில் கொல்ல திட்டமிடப்பட்டிருந்ததாம். அதன்படி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளான ஜூலை 5 ஆம் தேதி கொலை ஈடேறியது என வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் கொலை செய்ததும் ரத்தம் தோய்ந்த அரிவாளை கொண்டு சுரேஷின் படத்திற்கு முன் வைத்து பூஜை நடத்தியதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் காரியத்தின் போது எதிர் தரப்பை சேர்ந்த யாராவது கொலை செய்யப்படலாம் என்பதால் அன்றைய தினம் போலீஸார் கண்காணித்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவுதினம்.

எனவே ஆம்ஸ்ட்ராங் வசித்து வந்த பெரம்பூர் பகுதியிலும் அது போல் ஆற்காடு சுரேஷ் வசித்து வந்த புளியந்தோப்பு பகுதியிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான பாம் சரவணனின் தம்பி தென்னரசுவை கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே அவரது குடும்பத்தினர் கண் முன்னே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது.

15 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட புளியந்தோப்பை சேர்ந்தவர்தான் பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் வைத்து தென்னரசு கொலைக்கு ஒரு கும்பல் பழிவாங்கியது. இந்த வழக்கில் அரக்கோணம் ஒற்றைக்கண் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி, நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், அரக்கோணம் மோகன், நவீன், போஸ், சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த ரவுடி எட்வின், சென்னை ஆயிரம் விளக்கு அதிமுக 111 ஆவது வட்டச் செயலாளர் சுதாகர், மற்றொரு நிர்வாகி ஜான் கென்னடி ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்தான் நிதியுதவி அளித்து கொலையாளிகளுக்கு தங்குவதற்கு இடமும் கொடுத்ததாக ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் கருதி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்ட போது அவருடன் இருந்த மாதுவை கடந்த ஜனவரி மாதம் ஜாம்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து கொலை செய்தது ஆற்காடு சுரேஷ் தரப்பினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal