அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ.வை நியமித்தாக வேண்டும். இல்லாவிட்டால் மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மா.செ.க்களை மாற்ற வேண்டும் என்ற குரல் எழத் தொடங்கியிருக்கிறது.
எடப்பாடிக்கு எதிராக செயற்குழு கொந்தளிக்க போகிறதென்று, ஓ.பி.எஸ்., சசிகலா தரப்பு கிளப்பி விட்டனர். ஆனால், எவ்வித குழப்பமும் இல்லாமல் சுமூகமாக நடந்து முடிந்திருக்கிறது அ.தி.மு.க-வின் செயற்குழு கூட்டம்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்திருக்கிறார் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது ஒத்திவைத்துவிட்டு ஆகஸ்ட் 16-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, செயற்குழுவில் எடப்பாடியின் தலைமைக்கு எதிராக அதிமுக-வினர் கிளர்ந்து எழுந்து கலகம் செய்யவிருக்கிறார்கள். எடப்பாடிக்கு எதிராக செயற்குழு கொந்தளிக்க போகிறது’ என்று ஓ.பி.எஸ்., சசிகலா அனுதாபிகள் கிளப்பி விட்டனர். ஆனால், எவ்வித குழப்பமும் இல்லாமல் சுமூகமாக நடந்து முடிந்திருக்கிறது அ.தி.மு.க-வின் செயற்குழு கூட்டம்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் பேசி அமர்ந்த பிறகு, திண்டுக்கல் சீனிவாசன் பேசத்தொடங்கினார். ’2026 தேர்தல் தொடர்பாக முதற்கட்ட ஆலோசனை செய்ய தான் இங்கு நாம் கூடியிருக்கிறோம். 2026-ஐ விட்டால் நமக்கு கஞ்சி கிடைக்காது என்பதை மனதில் வைத்து வேலை பார்க்க வேண்டும். பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்த பிறகும், நமக்கு சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கவில்லை. இப்படி பேசுகிறேன் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வருத்தப்படக்கூடாது. ஆனால், அதுதான் உண்மை. இஸ்லாமியர்களின் வாக்கும், கிறிஸ்தவர்களின் வாக்கும் நமக்கு வரவே இல்லை. அதை நாம் சரி செய்ய வேண்டும்.இணைப்பு குறித்தோ… கூட்டணி குறித்தோ யோசிக்காமல், அடிப்படையை சரி செய்ய வேண்டும்.’ என்றார்.
தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, ‘ இணைப்புக்கு இங்கு அவசியம் ஏற்படவில்லை. துரோகம் செய்தவர்களை மீண்டும் கொண்டு வர என்ன அவசியம் இருக்கிறது. அதுகுறித்து பேசாமல், கட்சி வேலையை ஒழுங்காக பார்த்தாலே வெற்றி நமக்குதான்’ என்று பேசினார்.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்தாலும், சில சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள் நம்மிடம் பேசியபோது, ‘‘சார், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.தான் இனி… இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை செயற்குழு முடிவு செய்துவிட்டது. ஆனாலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை நாம் அப்படியே கடந்து சென்றுவிட முடியாது.
அ.தி.மு.க.வின் கோட்டையாக திகழக்கூடிய மதுரையில் அ.தி.மு.க. 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது குறித்து அம்மாட்ட மாவட்டச் செயலாளர்கள் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. (‘நாங்களும் ஓட்டு கேட்டோம்… ஆனா போடலையே…’ என வழக்கம் போல காமெடியாக பதிலளித்துவிட்டார் செல்லூர் ராஜு.) அதே சமயம் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க.விற்கு இணையாக பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் விட்டமினை இறக்கினார். ஆனாலும், அ.தி.மு.க. இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பாரிவேந்தர் டெபாசிட்டை இழந்தார்.
இந்த நிலையில்தான், மாவட்டச் செயலாளர்களே வேட்பாளர்களை தோற்கடிக்கும் உள்ளடி வேலைகளில் இறங்கியதாக உளவுத்துறை தகவல் கொடுத்தும் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். நடவடிக்கை எடுத்தால்தான் நிர்வாகிகளுக்கு அச்சம் இருக்கும். அதைவிட்டுவிட்டு, ‘ஒருங்கிணைப்பும் கிடையாது… நீங்கள் களத்தில் இறங்கி வேலைபாருங்கள்’’ என்ற அட்வைஸ் மட்டும் இருந்தால், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெல்வது கடினம். எனவே, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை உள்டபட பல மாவட்டங்களில் இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ.வை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மா.செ.க்களை மாற்ற வேண்டும்’’ என்றனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், கே.சி.வீரமணி ஆகியோர் தனிப்பட்ட பிரச்னையின் காரணமாக செயற்குழுவில் பங்கேற்கவில்லை. மேலும், நிலமோசடியில் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே இருக்கும், கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் செயற்குழுவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.