அ.தி.மு.க.வின் வாக்குகளை எப்படியாவது பெறவேண்டும் என்ற நோக்கில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் புகழந்து பேசினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான், மலிவு விலையில் உணவுகளை வழங்கி வரும் அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, அம்மா உணவகத்தை மேம்படுத்த ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திட்டம் அம்மா உணவகம். மிகவும் குறைவான விலையில் 3 வேளை உணவுகளை வழங்கும் அம்மா உணவகம் லட்சக்கணக்கான ஏழை மக்களின் பசியை ஆற்றியது. முதலில் சென்னையிலும், பின்னர் தமிழகத்தின் பல நகரங்களிலும் அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது.

சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் திறக்ப்பட்டன. ஆனால், தற்போது 399 இடங்களில் மட்டுமே அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், மதிய உணவாக சாம்பார் சாதம், கலவை சாதம் போன்றவை 5 ரூபாய்க்கும், இரவு 2 சப்பாத்தி குருமா 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு, ஏழைகளின் பசியை ஆற்றி வருகிறது. ஆனால், சமீபகாலமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாகவும், சுவை இல்லாதவையாகவும் இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதேபோல, முறையான பராமரிப்பின்றி அம்மா உணவகங்கள் அசுத்தமாக இருப்பதாகவும், சப்பாத்தி, கலவை சாதம் போன்றவை தரப்படுவதில்லை எனவும் கூறப்பட்டன. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதால்தான் திமுக அரசு அம்மா உணவகத்தை கண்டுகொள்ளவில்லை என அதிமுகவினரும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த சூழலில்தான், அம்மா உணவகத்தை மேம்படுத்த ரூ.5 கோடியை சென்னை மாநகராட்சி அண்மையில் ஒதுக்கியது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள வருகை பதிவேட்டை பார்த்த ஸ்டாலின், எத்தனை பேர் தினமும் இங்கு வந்து உணவருந்துகிறார்கள் என்ற தகவலை கேட்டறிந்தார். பின்னர் உணவின் தரத்தை ஸ்டாலின் ஆராய்ந்தார். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் உணவு எப்படி இருக்கிறது, குறைகள் ஏதும் இருக்கிறதா என்பதையும் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்திய 15 நிமிடங்களில் முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு வெளியானது. தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்தவும், சீரமைக்கவும் ரூ.21 கோடி உடனடியாக ஒதுக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். பழுதடைந்த பாத்திரங்களை உடனடியாக மாற்றுமாறும், உணவின் தரத்தை மேம்படுத்தவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தங்கள் தொகுதிகளில் உள்ள அம்மா உணவகங்கள் எப்படி இயங்குகிறது என்பதை அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் ஆய்வு செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் அம்மா உணவகங்கள் மீண்டும் பழைய பொழிவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பை மனதிற்கும் பெரிது வரவேற்கின்றனர். அ.தி.மு.க. பிளவுபட்டுக் கிடக்கும் நிலையில், மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதுதான், அ.தி.மு.க.வின் வாக்குகள் தி.மு.க.விற்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal