மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி வருகிற 20ஆம் தேதி தமிழகம் வர இருந்த நிலையில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு 9 முறை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், தமிழகத்தில் பாஜகவால் வாக்கு சதவீதத்தை மட்டுமே அதிகரிக்க முடிந்ததே தவிர வெற்றி பெற முடியவில்லை. அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. ஆனால் பிற மாநிலங்களில் பெற்ற வெற்றியை தொடர்ந்து பிரதமராக 3வது முறையாக மோடி பொறுப் பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், சென்னைக்கு முதல்முறையாக வரும் 20-ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எழும்பூர் – நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, மதுரை – பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க இருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை பயணம் நிர்வாக காரணங்களுக்காக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் தமிழக வருகை தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal