விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 10-ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியான தி.மு.க. முதல் ஆளாக களம் இறங்கி உள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார். தி.மு.க.வுக்கு போட்டியாக அ.தி.மு.க., பா.ம.க. சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். நாம் தமிழர் கட்சியும் போட்டியிட தயாராகி வருகிறது.

தி.மு.க. சார்பில் முன்கூட்டியே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகத்துடன் ஆலோசித்து வருகிறார். இருவரும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி விவாதித்துள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில்  போட்டியிடுவதற்கு 7 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.  கடந்த சட்டமன்ற தேர்தலில் இவரே போட்டியிட்டிருந்தார். இதனால் இவருக்கே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காணை ஒன்றிய செயலாளர் ராஜா, விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர்கள் பன்னீர், முகுந்தன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் லட்சுமி நாராயணன், தொழில் அதிபர் டி.கே.சுப்பராயன், விக்கிரவாண்டி நகர செயலாளர் பூரண ராவ் ஆகியோரும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டுள்ளனர்.

இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இருப்பினும் இன்று அல்லது நாளை வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்து அறிவிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் விவரம் அல்லது நாளை வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்து அறிவிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

எனவே அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் விவரம் இன்று மாலையிலோ நாளை காலையிலோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள  நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal