நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜ.க. இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

இதையடுத்து, ஜானதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிர்மலா சீதாராமன், குமாரசாமி உள்பட 71 மத்திய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்தியக் குடிமகன் என்ற முறையில் நேற்றுப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான புதிய மத்திய அரசுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி தருக! என பதிவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal