இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், நேற்று பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடி பிரதமர் அலுவலகத்தில் உள்ள சவுத் பிளாக்கில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி விவசாயிகளுக்கான நிதி வழங்கும் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இந்த திட்டத்தின் 17 ஆவது தவணையை விடுவிக்கும் கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
இந்த திட்டத்தின் கீழ் 9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி தொகையை பிரதமர் விடுவித்தார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.