“நான் எப்போதும் பிரதமர் மோடியுடன் இருப்பேன்” என்று ஐக்கிய ஜனத தள தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் உறுதி அளித்து பாஜக கூட்டணி ஆட்சிக்கான புதிய நம்பிக்கையைப் பாய்ச்சியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் நிதிஷ் குமார் கட்சி மாறியது ஐந்து முறை. அதனால் இப்போதும் ஒருவேளை அவர் கட்சி மாறலாம் என்ற ஊகங்களுக்குக் குறைவில்லாமல் செய்திகள் உலா வந்தன. ‘பல்டி குமார்’ என்ற பெயரும் அவருக்கு உண்டு என்பதால் 6வது முறை பல்டி எப்போது என்றே பகிரங்கமாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், அவற்றிற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதோடு மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு புது நம்பிக்கை பாய்ச்சும் உரையாற்றியுள்ளார் நிதிஷ் குமார்.
டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)-வின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், சிவ சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், என்டிஏ தலைவராக நரேந்திர மோடியை பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் முன்மொழிய அனைவரும் அதை வழிமொழிய மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக பாஜக தலைவர்கள் தொடங்கி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என ஒவ்வொருவராக உரையாற்றினர்.
அந்த வரிசையில் பேசிய நிதிஷ் குமார், “இன்று நாம் அனைவரும் ஒன்றாக இணைந்திருப்பது மிக நல்ல விஷயம். நாங்கள் எல்லோரும் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவோம் பிரதமர் மோடி அவர்களே. ஞாயிற்றுக் கிழமை நீங்கள் பிரதமராக பதவியேற்க இருக்கிறீர்கள். நான் இன்றே நீங்கள் பதவியேற்றிருக்கலாம் என விரும்புகிறேன். நீங்கள் எப்போது உறுதிமொழி ஏற்றாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நாங்கள் உங்கள் தலைமையில் இணைந்து பணியாற்றுவோம்.
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இந்த தேசத்துக்கும் சரி எங்கள் மாநிலத்துக்கும் சரி எதுவும் செய்ததில்லை. இன்று அவர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அடுத்த முறை நீங்கள் ஆட்சிக்கு வரும்போது அவர்கள் யாருமே, எங்குமே வென்றிருக்க மாட்டார்கள்.
நரேந்திர மோடி இந்தியப் பிரதமராவதை எனது ஐக்கிய ஜனதா தளக் கட்சி ஆதரிக்கிறது. 10 ஆண்டுகளாக அவர் பிரதமராக இருந்ததையும், இப்போது மீண்டும் பிரதமராக இருப்பதையும் எண்ணி நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவர் இந்த தேசத்துக்காக சேவை செய்துள்ளார். அந்தச் சேவையில் ஏதேனும் மிச்சமிருந்திருந்தால் அவற்றை இந்த ஆட்சியில் அவர் பூர்த்தி செய்வார். இனி எப்போதும் நாங்கள் அவருடன் இருப்போம்” என்றார்.
நிதிஷ் குமாரின் பேச்சை பிரதமர் தொடங்கி பாஜகவினர் அனைவரும் உற்சாகத்துடன் கேட்டு ரசித்து ஆர்ப்பரித்தனர். குறிப்பாக அவர் ‘அடுத்த முறை அவர்கள் யாரும் ஜெயிக்க மாட்டார்கள்’ என்று கூறியபோது ஆரவார ஒலி எழுப்பினர். நிதிஷ் குமாரின் இந்த அறிவிப்பு மத்தியில் ஸ்திரமான ஆட்சிக்கான கட்டியங் கூறுதல் போல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 சீட்கள் தேவை என்ற நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இதனால் பாஜக கூட்டணிக் கட்சிகள் உதவியோடு ஆட்சியமைக்கிறது. இதில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்.பி.க்களும், தெலுங்கு தேசத்தின் 16 எம்.பி.க்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
அதேபோல் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றதற்கு அனைவரையும் வாழ்த்துகிறேன். தேர்தல் பிரசாரத்தின் போது 3 மாதங்களாக பிரதமர் மோடி ஓய்வே எடுக்கவில்லை. இரவு பகலாக பிரச்சாரம் செய்தார். எந்த உற்சாகத்துடன் பிரச்சாரத்தை தொடங்கினாரோ அதே உற்சாகத்துடன் பிரச்சாரத்தை முடித்தார். ஆந்திராவில் நாங்கள் 3 பொதுக் கூட்டங்கள் மற்றும் ஒரு பெரிய பேரணியை நடத்தியுள்ளோம். இது ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்தது. நரேந்திர மோடிக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. மேலும் அவர் தனது கொள்கைகளை கச்சிதமாக நேர்மையாக செயல்படுத்துகிறார். இன்று இந்தியாவுக்கு சரியான தலைவர் இருக்கிறார். அதுதான் நரேந்திர மோடி. இந்தியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
கடந்த நான்கு தசாப்தங்களாக அரசியலில் இருக்கும் நான் எத்தனையோ தலைவர்களை பார்த்திருக்கிறேன். உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக நரேந்திர மோடிக்கு எல்லாப் புகழும் செல்ல வேண்டும். நாட்டுக்காக அவர் செய்த மிகப்பெரிய சாதனை இது. அவரது தலைமையில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை எட்டியுள்ளோம்.
இப்போது, இந்த ஆட்சியில் அவர் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றப் போகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். மோடி தலைமையில், உலகில் எங்கு சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் பெறப்படுகிறது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவரது தலைமையில், இந்தியர்கள் எதிர்காலத்தில் உலகத் தலைவர்களாக மாறப் போகிறார்கள்” என்று சிலாகித்துப் பேசினார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் தான் ‘கிங் மேக்கர்ஸ்’ என்று பார்வைகள் முன்வைக்கப்பட்டன. சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேசியதும் கவனம் பெற்றது. ஒருவேளை அவர்கள் இருவருடனும் இண்டியா கூட்டணி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்துமோ என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், எந்தச் சலனமும் இல்லாமல் முதல் நாள் தொட்டே இருவரும் என்டிஏ கூட்டணியில் வலுவான சகாக்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இன்று அதனை அவையில் நிரூபித்துள்ளனர்.
இனி இண்டியா கூட்டணி வலுவான எதிர்க்கட்சிக்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.