தமிழகத்தில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள், திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஜூன் 4-ம் தேதி இரவே நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பி-க்களை முதல்வர் சந்தித்தார். அப்போது முதல்வருக்கு எம்பி-க்களும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். எம்பி-க்களுக்கு முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக எம்பி-க்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில், மக்களவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் மக்களவை உறுப்பினர்கள் பணிகள் குறித்தும் அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இந்த 2024-25-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 20-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பிப்ரவரி 22-ம் தேதி வரை நடைபெற்றது.

வழக்கமாக பட்ஜெட்டை ஒட்டி, துறைகள் தோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படும். ஆனால், மக்களவை தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, மக்களவை தேர்தல் முடிவுற்று, நடத்தை விதிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவுடன் திரும்பப் பெறப்பட்டது. தற்போது அரசின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (வெள்ளிகிழமை) பேரவைத்தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஜூன் 24-ம் தேதி காலை 10 மணிக்கு துறை ரீதியான மனியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் தொடங்கும். இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஜூன் 24 -ம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது 10 நாட்களுக்கு முன்போ அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal