தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 2ஆவது இடத்தை அதிமுக 29 இடங்களில் பெற்றுள்ளது. அது போல் 10 இடங்களில் பாஜக 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் இன்னும் சில சுற்றுகள் எண்ணிக் கொண்டிருப்பதால் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. கடந்த முறையாவது தேனி தொகுதி நீங்கலாக மற்ற 38 இடங்களை பெற்றது. ஆனால் இந்த முறை 39 தொகுதிகளிலும் இவ்வளவு ஏன் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 29 தொகுதிகளில் அதிமுக இரண்டாவது இடத்தில் உள்ளது. அது போல் 10 தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால்தான் வெல்ல முடியவில்லை என எம்பி சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கூறி வந்தனர்.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணி , அதிமுக கூட்டணி , பாஜக , நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட்டன. இந்த நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக 25.78 சதவீத வாக்கு சதவீதத்தையும் அதிமுக 20.43 சதவீதத்தையும் காங்கிரஸ் 10.81 சதவீதத்தையும் பாஜக 10.69 சதவீதத்தையும் பெற்றுள்ளது.

தென் சென்னை, கோவை, தருமபுரி, மதுரை, நீலகிரி தொகுதிகளில் அதிமுக 3ஆம் இடம் பிடித்துள்ளது. கன்னியாகுமரியில் அதிமுக 4ஆம் இடத்திலும் 20 தொகுதிகளில் அதிமுக 2ஆம் இடத்திலும் உள்ளது. அதிமுக போட்டியிட்ட 33 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்தில் உள்ளது. ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளரை மூன்றாம் இடத்திற்கு தள்ளி 2-ஆம் இடத்தை ஓபிஎஸ் பெற்றுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal