அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம். இங்கே கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக பேமா காண்டு என்பவர் இருந்து வருகிறார்.

இப்போது லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அத்துடன் அருணாச்சல பிரதேசத்திற்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 19ஆம் தேதியே அருணாச்சல பிரதேசத்திற்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

முதலில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அம்மாநிலச் சட்டசபை ஜூன் 2ஆம் தேதியுடன் நிறைவடைதல், வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே அதாவது ஜூன் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 2ஆம் தேதி காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும்.

அருணாச்சல பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 60 இடங்கள் இருக்கிறது. அதில் குறைந்தபட்சம் 31 தொகுதிகளில் வெல்லும் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும். அங்கு பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அங்கு மொத்தம் 60 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் ஏற்கனவே 10 தொகுதிகளில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டது. அந்தத் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கடைசி நிமிடத்தில் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் பாஜக 10 தொகுதிகளில் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 50 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது.

இந்தச் சூழலில் தான் அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ஆம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 2000க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ளனர். மாநிலத்தில் மொத்த 24 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 2019இல் நடந்த அருணாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக 41 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணியில் இருந்த ஜேடியு 7 தொகுதிகளிலும், என்பிபி கட்சி 5 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.

அதே சமயம் அங்குள்ள (மேற்கு அருணாச்சல பிரதேசம், கிழக்கு அருணாச்சல பிரதேசம்) இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கு வழக்கம் போல ஜூன் 4ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal